எப்சி கட்டணம் 10 மடங்கு உயர்வு.. நாமக்கல் லாரி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு
நாமக்கல்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தி கடந்த 11.11.25 அன்று உத்தரவிட்டது. இந்த கட்டண உயர்வை ரத்து செய்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், பலன் அளிக்காத நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு பழைய வாகனங்களைச் சாலைகளில் இருந்து குறைக்கும் நோக்கில், தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate - FC) புதுப்பிப்பதற்கான கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியது. 10 - 15 ஆண்டுகள் என்றால் முன்பு ₹ 2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ₹ 1,000 + கூடுதல் வரிகள் என்று மாற்றப்பட்டது. அதேபோல் 15 முதல் 20 ஆண்டுகள் வாகனங்கள் என்றால், 2500 கட்டணமாக இருந்தது. இப்போது 12500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 20 ஆண்டுகளுக்கு மேல் என்றால் முன்பு 3500 ஆக இருந்தது. இப்போது 25000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்கள் தரப்பில், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டண உயர்வு ஏற்கனவே சுமையாக உள்ள நிலையில், இந்த FC கட்டண உயர்வு தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக கூறி வந்தார்கள். கட்டணம் குறைக்கப்படாததால் தற்போது வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ், செயலாளர் சாத்தைய்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தி கடந்த 11.11.25 அன்று உத்தரவிட்டது. மேலும் 17.12.25 முதல் போக்குவரத்து துறையின் இணையதளத்தில் வரைவு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களை வாகனங்களின் பதிவு வருடத்திற்கு ஏற்ப அவசர, அவசரமாக நடைமுறைப்படுத்தியது.
இந்த கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களாகிய எங்களுக்கு பேரிடியாக அமைந்தது. எனவே கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போக்குவரத்து துறை அமைச்சர், அதிகாரிகள், எம்.பி.க்களை சந்தித்து நேரில் கோரிக்கை வைத்தோம்.
கட்டண உயர்வு ரத்து சம்பந்தமான உத்தரவு இன்று வரும், நாளை வரும் என 90 நாட்களுக்கு மேல் காத்திருந்தும் பலனில்லை. இது சம்பந்தமான எங்களது கோரிக்கை தமிழக முதல்வர்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? என்பதும் கேள்வி குறியாய் உள்ளது.
இந்த கட்டண உயர்வை ரத்து செய்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம் பலன் அளிக்காத நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் நாமக்கல்லில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் சம்பந்தமான தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்" இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications