மங்காத்தா பட பாணி.. லாரியில் கொள்ளை பணம்! வட மாநில கொள்ளையர்களை சுட்டு பிடித்த தமிழ்நாடு போலீஸ்
நாமக்கல்: கேரள மாநிலத்தில் ஏடிஎம்களில் கொள்ளை அடித்துவிட்டு, அந்த பணத்துடன் தமிழ்நாடு வழியாக கொள்ளையர்கள் தப்ப முயன்றுள்ளனர். இதற்கு எதிராக தமிழ்நாடு போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். போலீசார் நடத்திய என்கவுண்டரில் ஒரு கொள்ளையர் கொல்லப்பட்டிருக்கிறார்.
கேரள மாநிலம் திருச்சூரில் இன்று அதிகாலை சுமார் 3-4 மணி அளவில் மூன்று ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. மூன்று இடங்களிலும் கேஸ் வெல்டிங் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மொத்தமாக ஏடிஎம்களில் இருந்த ரூ.68 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருக்கின்றனர். இதையடுத்து உஷாரான கேரள போலீஸ் கொள்ளையர்கள் தப்பி செல்ல வாய்ப்புள்ள வழிகளில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அதேபோல கொள்ளை குறித்து தமிழ்நாடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறம் இன்று காலை சுமார் 7 மணி அளவில் கண்டெய்னர் லாரி ஒன்று, நாமக்கல் மாவட்டத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்றிருக்கிறது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த பைக், ஆட்டோ உள்ளிட்டவற்றையும் இடித்துவிட்டு தாறுமாறாக ஓடியிருக்கிறது. இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
தகவலை அடுத்து போலீசார் லாரியை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், போலீசாரின் வாகனங்களை மோதிவிட்டு லாரி எஸ்கேப் ஆக முயற்சித்துள்ளது. இதையடுத்து சுமார் 30க்கும் மேற்பட்ட பைக்குகளில் துரத்தி சென்று லாரியை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். ஆனால் எதிர்பாராத நேரத்தில் லாரியில் இருந்தவர்கள் துப்பாக்கியை கொண்டு போலீசாரை தாக்க முயன்றுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செக்போஸ்ட்டில் நிற்காத லாரி, துப்பாக்கியை கொண்டு தாக்க முயன்ற மர்ம நபர்கள்.. யார் இவர்கள்? எதற்காக சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றனர்? என்கிற கோணத்தில் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, லாரி மூலம் தப்பிக்க முயன்றவர்கள் ஹரியானாவின் மேவாட் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் லாரியை சோதனை செய்ததில், அதில் கட்டுக்கட்டாக பணமும், சொகுசு காரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளை அடித்துவிட்டு, கொள்ளைக்கு பயன்படுத்திய காரை, கண்டெய்னர் லாரியில் பதுக்கி தப்ப முயன்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து லாரியில் பயணித்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேவாட் கொள்ளையர்கள் பவாரியா கொள்ளையர்களை போலவே ஆபத்தானவர்கள். ஆனால் அவர்களைவிட இவர்கள் புத்திசாலிகள் என்று போலீசார் கூறுகின்றனர். சர்வதேச அளவில், பல நாடுகளில் நடக்கும் கொள்ளை சம்பவங்களை படித்து தெரிந்துக்கொண்டு அதே பாணியில் பல்வேறு மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபடுவார்கள். மேலும், கொள்ளை நடந்த மாநிலத்திலிருந்து உடனடியாக தப்பிப்பதை நோக்கமாக கொண்டிருப்பார்கள். எனவே, இவர்களை பிடிப்பது சவாலான காரியமாக இருந்து வந்தது.
இன்று மங்காத்தா திரைப்பட பாணியில், லாரியில் கட்டு கட்டாக பணத்தை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக தப்பிக்க முயன்றபோது பிடிபட்டிருக்கிறார்கள். இந்த கொள்ளையர்களின் முழு விவரம், முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications