கோடீஸ்வர முகத்துடன் ஓடிய ரோபோ நாய்கள்.. அங்கே எலான் மஸ்க் பார்த்ததுமே ஓட்டம் பிடித்த பெர்லின் மக்கள்
நியூயார்க்: ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உள்ள புகழ்பெற்ற தேசிய அருங்காட்சியகத்தில், மனிதர்களுக்குப் பதிலாக உலகக் கோடீஸ்வரர்களின் முகங்களைச் சுமந்தபடி ரோபோ நாய்கள் உலாவரும் வினோதமான கண்காட்சி ஒன்று அரங்கேறி வருகிறது. தொழில்நுட்ப ஜாம்பவான்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோரின் முக அமைப்பை கொண்ட இந்த ரோபோக்கள், அங்கிருந்த பார்வையாளர்களைத் துரத்திச் சென்று பீதியில் ஆழ்த்தியது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல டிஜிட்டல் கலைஞர் பீப்பிள்.. இவரது நிஜமான பெயர் மைக் வின்கல்மேன்., இவர்தான் இந்த சர்ச்சைக்குரிய கலைப் படைப்பை உருவாக்கியவர். தனது படைப்புகளை பல கோடி ரூபாய்க்கு விற்று சாதனையும் படைத்திருக்கிறார்..

"ரெகுலர் அனிமல்ஸ்" என்ற பெயரில் இந்த வினோத கண்காட்சியை இவர் வடிவமைத்துள்ளார். தொழில்நுட்பமும் அதிகாரமும் எப்படி மனித வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டவே இத்தகைய ஒரு முயற்சியைத் தான் எடுத்ததாக பீப்பிள் விளக்கியுள்ளார்.
ஜெர்மனி ரோபோ நாய்கள்
இந்த கண்காட்சியில் 4 கால்களுடன் ஓடித் திரியும் ரோபோ நாய்களின் தலைப்பகுதியில், சிலிகான் ரப்பர் கொண்டு தத்ரூபமாக செதுக்கப்பட்ட எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோரின் முகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர, புகழ் பெற்ற ஓவியர்களான பாப்லோ பிக்காசோ மற்றும் ஆண்டி வார்ஹோல் ஆகியோரின் முகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ரோபோக்கள் கண்காட்சி ரூமுக்குள் தன்னிச்சையாக குறுக்கும் நெடுக்குமாக ஓடித் திரிவதுடன், அங்கு வரும் பார்வையாளர்களை விடாமல் துரத்துகின்றனவாம். திடீரென தங்களை நோக்கி வரும் இந்த வினோத உருவங்களைக் கண்டு மக்கள் அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.. சிலர் கடும் அச்சத்தில் உறைந்து போய் விட்டார்களாம்.. ரோபோ நாய்களின் இந்த அச்சுறுத்தும் செயல்முறை அங்கிருந்தவர்களை ஒருவித பதற்றத்திலேயே வைத்திருந்தது.
பணக்கார முகங்கள்
இந்தக் கண்காட்சியில் ஹைலைட்ஸ் என்ன தெரியுமா? மொத்தம் 6 முக்கிய நபர்களின் முகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.. எலான் மஸ்க் (டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனர்), மார்க் ஜுக்கர்பெர்க் (மெட்டா உரிமையாளர்), ஜெஃப் பெசோஸ் (அமேசான் நிறுவனர்), பாப்லோ பிக்காசோ (புகழ் பெற்ற ஓவியர்), ஆண்டி வார்ஹோல் (பாப் ஆர்ட் கலைஞர்) என்று 5 டாப் பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் பீப்பிள் அதாவது இந்தக் கலைஞரே தன்னுடைய முகத்தையும் ஒரு ரோபோவுக்கு வைத்து விட்டாராம்.
இந்த 6 ரோபோக்கள் வெறும் ஓட்டத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. அடிக்கடி மலம் கழிப்பதைப் போல ஒரு குறிப்பிட்ட இடத்தில் காகிதங்களை வெளியேற்றுகின்றன. அந்த காகிதங்களில், அந்தந்தப் பிரபலங்களின் பாணியில் வரையப்பட்ட ஓவியங்கள் அச்சிடப்பட்டு கீழே விழுகின்றன. உதாரணமாக, ஆண்டி வார்ஹோல் முகத்தைக் கொண்ட ரோபோ நாய், அவரது கலைப்பாணியிலான வண்ணப்படங்களை உதிர்க்கிறது.
வினோத ரோபோக்கள்
இந்த வினோத ரோபோக்கள் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் 2029ம் ஆண்டில் இவை முழுமையாக செயலிழந்துவிடும். அதன் பிறகு இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் கணினித் தரவுகளாக மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவின் மியாமி மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சி, இப்போது பெர்லினில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியாமியில் நடந்த கண்காட்சியின் போது, இந்த ரோபோக்கள் வெளியிட்ட ஓவியங்களுக்கு "இயற்கையான நாய் மலம்" என்று சான்றிதழ் வழங்கி கலைஞர் பீப்பிள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டாராம்...!!!













Click it and Unblock the Notifications