கொரோனாவிலிருந்து குணமடைந்து.. 1 வருடத்திற்கு பின்பும் கூட இதய பாதிப்புகள் ஏற்படலாம்.. ஆய்வு தகவல்!
நியூயார்க்: கொரோனாவில் இருந்து குணமடைந்து ஒரு வருடம் ஆன பின்பும் கூட சிலருக்கு மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்த பின்பும் கூட பலருக்கு மூச்சு திணறல், வேகமான இதய துடிப்பு, படபடப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. சிலருக்கு இந்த பாதிப்பு சில நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு இந்த பாதிப்பு நீண்ட நாட்களுக்கு தொடரும் வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு ரத்த கட்டு பிரச்சனைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. திடீரென கை, கால்களில் ரத்த கட்டு பிரச்சனை ஏற்பட்டு, மரத்து போகும் நிலை ஏற்படுகிறது.

என்ன நடக்கும்
இந்த நிலையில்தான் கொரோனாவில் இருந்து குணமடைந்து ஒரு வருடம் ஆன பின்பும் கூட சிலருக்கு மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸ் ஹெல்த் கேர் சிஸ்டம் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி கொரோனாவில் இருந்து குணமடைந்து முற்றிலுமாக வெளியே வந்தவர்களுக்கு கூட இதயம், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனை
சிலருக்கு லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். அவர்கள் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் கூட ஏற்பட்டு இருக்காது. அப்படி உள்ளவர்களுக்கும் கூட ஒரு வருடத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்கு பின்பும் மாரடைப்பு, ரத்த கட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்களிடம் இந்த ஆய்வு செயின்ட் லூயிஸ் ஹெல்த் கேர் சிஸ்டம் மருத்துவமனையில் நடத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளும், மக்களும், அரசும் இந்த பிரச்சனையை சாதாரணமாக நினைப்பதாகவும், இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், மருத்துவமனைகள் உடனே இந்த பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பீடு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 151,195 ராணுவ வீரர்கள், கொரோனா பாதிப்பு ஏற்படாத ராணுவ வீரர்களை ஒப்பிட்டு இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 151,195 பேருக்குத்தான் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரிஸ்க்
அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்படாமல் குணமடைந்த நபர்களுக்கு 39 சதவிகிதம் வரை இதயம் செயல் இழக்கும் ரிஸ்க் உள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. இதயத்திற்கு செல்லும் குழாயில் ரத்த கட்டு ஏற்படும் ரிஸ்க் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு உடலில் பல இடங்களில் ரத்த கட்டு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் 2.8 மடங்கு அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

ரத்த கட்டு
இதனால் இதயம் செயல் இழப்பது. மூளை செயல் இழப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தொடர்ந்து தங்கள் இதய செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். ரத்த கட்டு பிரச்சனை, இதய துடிப்பு பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications