டெக்னாலஜி VS மனித குலம்.. கூகுளிலிருந்து விலகிய AI காட்ஃபாதர்! காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பின் 'காட்ஃபாதர்' என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் AI குறித்து கடுமையான எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.
ஜெஃப்ரி ஹிண்டன் நரம்பியலில் செய்த ஆராய்ச்சிதான் இன்று ChatGPT போன்றவை உருவாக காரணமாக இருந்துள்ளது. மனிதனின் நரம்பியலில் ஏற்படும் மாற்றங்கள், எந்தெந்த விவகாரத்தில் இவை எப்படி செயல்படுகின்றன போன்ற விவரங்களை ஆய்வு செய்து அதை செயற்கையாக எப்படி பயன்படுத்துவது என்று சோதனை செய்து இதில் வெற்றியும் கண்டவர்தான் ஜெஃப்ரி ஹிண்டன். இதானல்தான் அவர் காட்ஃபாதர் என்று அழைக்கப்படுகிறார். இப்படி இருக்கையில் இவர் எந்த நிறுவனத்திற்காக வேலை பார்த்தாரோ அந்த நிறுவனத்திலிருந்தே வெளியேறியிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மனிதன் சிந்தித்து செயல்படுவதை போல இயந்திரங்களும் சிந்தித்து செயல்பட்டால் எப்படி இருக்கும்? இதுதான் செயற்கை நுண்ணறிவு உருவாக காரணமாக இருந்த சிந்தனை. தொடக்கத்தில் சிறிது சிறியதாக பயன்படுத்தப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு தற்போது ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு மனிதனை போல உருவாக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மனிதர்களை விட செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோவுக்கு அதிக தகவல்கள் தெரிந்திருக்கும்.
சரி இவ்வளவையும் வெற்றிகரமாக உருவாக்கிவிட்டு ஏன் ஜெஃப்ரி ஹிண்டன் கூகுளிலிருந்து வெளியேறினார்? என்கிற கேள்வி பரவலாக எல்லோருக்கும் எழுந்தது. இதற்கு அவரே விடையளித்துள்ளார். அதாவது செயற்கை நுண்ணறிவின் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேசவே இந்த வேலையை விட்டதாக கூறியுள்ளார். ஜெஃப்ரி ஹிண்டன் AI கண்டுபிடிப்புகளை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக கூகுளில் பார்ட் டைமாக வேலை செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிபிசி செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களுடன் சேர்ந்து அவர்கள் சொல்வதை நிறைவேற்றும் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டது. தற்போது வரை இப்படிதான் இருக்கிறது. ஆனால் இது விரைவில் மாறும். மனிதர்களை விட அதிக திறன் மற்றும் அறிவை இது பெரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதேபோல இந்த தொழில் நுட்பம் நாசகர எண்ணம் கொண்டவர்களிடம் சிக்கினால் என்ன ஆகும்?
டிஜிட்டல் அமைப்புகளிடம் உள்ள செயற்கை நுண்ணறிவை நம்மால் பிரதி எடுக்க முடியும். இதுதான் தற்போது பிரச்னை. இயந்திரங்கள் தங்கள் எதிரி யார் என்பதை முடிவெடுக்கும் திறனை பெற்றுவிட்டது எனில் அதனை கட்டுப்படுத்துவது சிரமம். கூகுளை பொறுத்த அளவில் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது. இது கூகுளை விமர்சிக்க வேண்டிய நேரம் இல்லை. முதலில் எனக்கு 75 வயதாகிவிட்டது. என்னால் இதற்கு பின்னரும் ஆக்டிவாக வேலை செய்ய முடியாது. இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் என்று கருதுகிறேன். அதேபோல கூகுள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகும்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யா-உக்ரைன் போரை குறிப்பிட்டு, "புதின் கைகளில் இந்த AI தொழில்நுட்பம் கிடைத்துவிட்டால் என்ன நடக்கும்? என்று யோசித்து பார்த்தீர்களா?" என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். ஜெஃப்ரி ஹிண்டன் கேள்வி தற்போது ஒன்றே ஒன்றுதான். மனிதர்கள் பகுத்தறிவுடன் செயல்படுகிறார்கள். ஆனால் இயந்திரங்களுக்கு செயற்கை நுண்ணறிவை கொடுக்க முனையும் நாம் பகுத்தறிவையும் கொடுக்க முயற்சிக்கிறோம். பயங்கரவாதிகள் பகுத்தறிவுடன் செயல்படும் ஆயுதங்களை கைப்பற்றினால் அவர்கள் இந்த பூமியையே அழித்துவிடுவார்கள்.












Click it and Unblock the Notifications