டிரம்புக்கு தான் நோபல் பரிசு கொடுக்கணும்.. நெதன்யாகு பரிந்துரை கடிதம்.. தொடங்கியதா யூத லாபி?
நியூயார்க்: பல்வேறு நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நோபல் குழுவிற்கு கடிதம் எழுதி உள்ளார். அதுமட்டுமின்றி அந்த கடிதத்தை நேற்றைய டின்னர் விருந்தின்போது டொனால்ட் டிரம்பிடம் வழங்கிய நிலையில் யூத லாபி தொடங்கி விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. தற்போது டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு இருநாடுகள் இடையேயான உறவு என்பது இன்னும் பலமாகி உள்ளது. டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தான் வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
காசா மீதான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. அதேபோல் ஈரானுக்கு எதிராக சமீபத்தில் நடந்த 12 நாள் போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்க வேண்டும் என்பதில் இஸ்ரேல், அமெரிக்கா உறுதியாக இருந்தன.
இதையடுத்து இஸ்ரேல், ஈரான் மீது போரை தொடங்கிய நிலையில் அணுஆயுதத்துக்கு தேவையான யுரேனியம் செறிவூட்டும் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா ‛பங்கர் பஸ்டர்' மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்தது. இப்படி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு டின்னர் விருந்து வழங்கினார். டிரம்ப் அதிபராகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் அவர் நெதன்யாகுவை 3வது முறையாக சந்தித்துள்ளார். நேற்றைய டின்னர் விருந்தின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நோபல் பரிசு குழுவுக்கு நெதன்யாகு கடிதம் எழுதியுள்ளார். இந்த பரிந்துரை கடிதத்தை அவர் டிரம்பிடம் கொடுத்தார். இந்த வேளையில் நெதன்யாகு கூறுகையில், ‛‛நோபல் பரிசு கமிட்டிக்கு நான் அனுப்பிய பரிந்துரை கடிதத்தை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். அமைதிக்கான நோபல் பரிசை உங்களுக்கு வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுக்கு நீங்கள் தகுதியானவர்கள். நீங்கள் அதை பெற வேண்டும்'' என்று கூறினார்.
மேலும் நெதன்யாகு கூறுகையில், ‛‛டிரம்ப் ஒவ்வொரு நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட பாடுபட்டு வருகிறார். குறிப்பாக மத்திய கிழக்கில் அவர் தலைமை பண்புடன் செயல்பட்டு வுருகிறார். டொனால்ட் டிரம்ப் பேசும்போதே சமாதானத்தை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு நாடு, பிராந்தியத்திலும் அதை கடைப்பிடித்து வருகிறார்'' என்றார்.
இதையடுத்து நெதன்யாகு வழங்கிய கடிதத்தை பெற்று கொண்ட டொனால்ட் டிரம்ப், ‛‛உங்ளிடமிருந்து இதுபோன்ற கடிதம் வரும்போது அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி'' என்று கூறினார். டொனால்ட் டிரம்பை எடுத்து கொண்டால் அவர் தன்னை தானே ஒரு சமாதான தூதுவராக புகழ்ந்து கொள்கிறார். நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலில் அணுஆயுத போரை நிறுத்தியதாக பெருமைப்பட்டு கொண்டார். அதுமட்டுமின்றி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று என்று வெளிப்படையாக விருப்பம் கோரியிருந்தார்.
இதற்கிடையே தான் ஸ்ரேல் - ஈரான் மோதலையும் அமெரிக்கா தான் நிறுத்தியது என்று கூறி வருகிறார். இஸ்ரேல், ஈரான் நாடுகளிடம் அமெரிக்க தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தியதாக அவர் கூறினார். இந்நிலையில் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வலியுறுத்தி நோபல் பரிசு கமிட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார்.












Click it and Unblock the Notifications