“தயாராக இருக்கிறோம்..” காலிஸ்தான் தலைவர் கொலை வழக்கு குறித்து ஆதாரத்தை கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்
நியூயார்க்: கனடாவில் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், இந்தியா-கனடா உறவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான கனடா தரப்பு ஆதாரங்களை ஆய்வு செய்ய தயார் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இது தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நிஜ்ஜார் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இவர் கனடா குடியுரிமை பெற்ற அங்க வாழ்ந்து வந்ததால் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் காவல்துறை கனடாவுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் கனடா அதை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த சூழலில்தான் அவர் கனடாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை, இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார். இந்த கொலைக்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்றும், இது தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஜி20 மாநாட்டில் இந்தியாவுக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலைக்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் இது தொடர்பாக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கனடா அரசு இந்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை கனடாவிலிருந்து வெளியேற்றி உத்தரவிட்டுள்ளது. அதேபோல இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
இப்படியாக இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இது சர்வதேச அளவில் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற வெளிநாடுகளுடனான உறவு குறித்து கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து பேசியிருக்கிறார்.
அதாவது, "இந்த வழக்கு தொடர்பான கனடா தரப்பு ஆதாரங்களை ஆய்வு செய்ய இந்தியா தயார். நாங்கள் எந்த ஆதாரத்தையும் பார்க்காமல் தவிர்க்கவில்லை" என்று கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, ஆரம்பத்திலிருந்து கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்து வருகிறது. கனடா எந்த ஆதாரத்தையும் இந்தியாவிடம் வழங்கவில்லை என்று கூறி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஜெய்சங்கர் வெளிப்படையாகவே ஆதாரங்களை கேட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications