ஸ்டார் லைனரில் போனவர்கள்.. ஸ்பேஸ் எக்ஸில் திரும்புகிறார்களா? சுனிதா வில்லியம்ஸை மீட்க நாசா முடிவு
நியூயார்க்: வெறும் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பறந்த சுனிதா வில்லியம்ஸ், 2 மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் பூமி திரும்பாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இவரை எப்படி பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவது என்பது குறித்து இந்த மாதத்திற்குள் நாசா முடிவெடுக்க இருக்கிறது.
பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.
இதற்காக 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை 'ஸ்டார் லைனரின்' பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி இருவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும்.
குறிப்பாக டிஆர்பிட் பர்ன்(deorbit burn) சரியாக இருக்க வேண்டும். இந்த அம்சம்தான் பூமியின் வளிமண்டலத்திற்குள் விண்கலம் நுழையும் போது அதன் வேகத்தை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் இது இன்னும் கோளாறாகவே இருக்கிறது.
இப்படி இருக்கையில், இவர்கள் இவரையும் எப்படி பூமிக்கு அழைத்துவரப்போகிறோம் என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் நாசா முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்று நாசா அதிகாரிகள் கூறியுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் செப்டம்பரில் விண்ணில் பாய்கிறது. இதில் அவர்களை மீட்பதா? அல்லது ஸ்டார் லைனரை ரெடி செய்து மீட்பதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications