கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு.. 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
நியூயார்க்: மருத்துவத்துறையில் நடப்பாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்த இரண்டு மருத்துவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலாக சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 69 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 69 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இது தவிர பொருளாதார பாதிப்புகள், வேலையின்மை ஆகியவை சமூக பிரச்னைகளாகவும் வெடித்தது. பின்னர் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதன் தீவிரம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனாலும் உருமாற்றம் அடைந்த வைரஸ் இந்த தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாமல் பரவ தொடங்கியுள்ளது. அமெரிக்காவை பொறுத்த அளவில் மோசமான நிர்வாக காரணத்தால் சுமார் 11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் பெரும் வல்லரசு நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெற்கொள்ளாததால் இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதார நிபுணர்கள் விமர்சித்தனர்.
என்ன இருப்பினும் தடுப்பூசி தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்தது என்பதை மறுக்க முடியாது. இந்த தடுப்பூசி உற்பத்தியில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரே வீஸ்மேன் என இருவரும் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி உருவாக்கியதற்காக அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்/ஆய்வாளர் நோபல் பரிசு வென்றிருந்தாலும், சர்வதேச அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா தொற்று உயிரிழப்பு அதிகம்.
இவர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான mRNA தடுப்பூசியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். கொரோனா வைரஸில் உள்ள மரபு சங்கிலியான RNAவில் பல பிரதிகள் இருக்கும். இதில் ஒன்றுதான் mRNA. இந்த mRNA பிரதியை தனியாக பிரித்தெடுத்து, அதைபோலவே போலியான ஒன்றை உருவாக்கி அதை உடலுக்குள் செலுத்தினால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், போலியான mRNAவை எதிர்த்து சண்டை செய்யும். பின்னர் இதேபோன்று எப்போதாவது உண்மையான mRNA வந்தாலும் அதற்கு எதிராக சண்டை செய்து, தொற்று பாதிப்பிலிருந்து மனிதனை காப்பாற்றிவிட முடியும். இதை அடிப்படையாக கொண்டுதான் தடுப்பூசிகளை ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன.












Click it and Unblock the Notifications