ஒன் பை ஒன்.. இலவச ஆஃபர் போல விடாமல் விரட்டும் புது வகை கொரோனா வைரஸ்! இந்த முறை அமெரிக்காவிலிருந்து!
நியூயார்க்: உலகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த பாதிப்பு XBB.1.5 எனும் உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் உயிரிழப்பு, பொருளாதார நெருக்கடி, மருத்துவ அவசரநிலை என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதிலிருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பானது ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருப்பினும் இந்த பாதிப்பிலிருந்து இன்னமும் சில நாடுகள் மீளாமல் தவித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் தற்போது மீண்டும் இந்த தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் மட்டும் சுமார் 10 கோடி பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1.25 லட்சம் பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சரிபாதி பேர் XBB.1.5 எனும் உருமாற்றமடைந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அச்சுறுத்தல்
இந்த XBB.1.5 வைரஸ் ஒமிக்ரான் வைரஸிலிருந்து உருமாற்றம் அடைந்திருக்கிறது. மட்டுமல்லாது தடுப்பூசியால் இந்த வகை வைரஸ்களை தடுத்து நிறுத்த முடியாது. எனவே வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் அமெரிக்காவிலிருந்து உலகம் முழுவதும் பரவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் 41 சதவிகிதமும், ஐரோப்பா மற்றும் மேலும் சில நாடுகளில் மிக குறைந்த அளவும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஒரு சிலருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இது ஒமிக்ரான் வைரஸை போல பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

தடுப்பூசி
இந்த வைரஸ் ஒமிக்ரான் போல சக்தி வாய்ந்தது கிடையாது என்றாலும், தடுப்பூசியால் இதனை தடுக்க முடியாது என்பதுதான் இதில் இருக்கும் பெரிய பிளஸ் பாயிண்ட். எனவே இது பரவ தொடங்கினால் ஒரு வாரம் வரை ஆளை வாட்டி எடுத்துவிடும். அதேபோல இதற்கான தடுப்பூசியை கண்டறிவதும் சவாலான பணி. அப்படி கண்டறிந்தாலும், இந்த வரைஸ் இதைவிட மேம்பட்ட ஒரு வைரஸாக உருவெடுத்துவிடும். எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் விஞ்ஞானிகள் விழிபிதுங்கி நின்றுள்ளனர். இதனை தடுக்க தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துவதே சிறந்தது என்று அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

சீனா
இந்த வழிமுறையானது எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வழிமுறையை பின்பற்றிதான் சீனா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பாதிப்பை தடுத்தது வந்தது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற மக்கள் போராட்டம் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. எனவே மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்த அளவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாதான் அதிக மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் இது இந்தியாவில் பரவினால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா
இந்தியாவை பொறுத்த அளவில் 4.4 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக அளவில் மூன்றாவது பெரிய உயிரிழப்பாகும். அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் பெரிய அளவுக்கு விதிக்கப்படாததால் XBB.1.5 வகை உருமாறிய வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications