கத்தியால் குத்தப்பட்ட சல்மான் ருஷ்டி.. அவசர அவசரமாக மருத்துவமனை வந்த 4வது முன்னாள் மனைவி!
நியூ யார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சல்மான் ருஷ்டியை சந்திக்க அவரது 4வது மனைவி மருத்துவமனை வந்துள்ளார்.
Recommended Video
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. மும்பையில் பிறந்த இவர், மிட்நைட்ஸ் சில்ட்ரன் படைப்புக்காக சர்வதேச அளவில் மிகமுக்கிய விருதான புக்கர் பரிசை வென்றவர். இவர் எழுத்தில் 1988ல் வெளியாகிய தி சாட்டனிக் வெர்சஸ், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சல்மான் ருஷ்டி
இதனால் இஸ்லாமிய நாடுகள் சார்பாக கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து சல்மான் ருஷ்டி உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்தது. இந்த நிலையில் நியூயார்க் நகரில் உரையாற்ற சென்றிருந்தார் சல்மான் ருஷ்டி. இதற்காக நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர். அப்போது பார்வையாளர்களில் ஒருவர் திடீரென மேடையில் ஏறி சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் சல்மான் ருஷ்டி நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

தாக்குதல் நடத்தியது யார்?
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ருஷ்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபர் 24 வயதான ஹடி மடர் என்பதும், நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

சிகிச்சை விவரம்
இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டி செயற்கை சுவாசக் கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு கண் பார்வையை ருஷ்டி இழக்க நேரிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான் ருஷ்டி திருமணம்
20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்தும் வரும் சல்மான் ருஷ்டிக்கு, இதுவரை 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். முதல்முதலாக கிளாரிசா லார்ட் என்ற பெண்ணை திருமணம் செய்த ருஷ்டி, அவருடன் 11 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்தார்.
தொடர்ந்து முதல் மனைவியை விவாகரத்து செய்த அடுத்த ஆண்டிலேயே சக எழுத்தாளரான அமெரிக்காவைச் சேர்த மேரியான் விக்கின்ஸை திருமணம் செய்தார். அவருடன் 6 ஆண்டுகள் திருமண உறவில் இருந்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக எலிசபெத் என்ற எழுத்தாளரை திருமணம் செய்தார். அவருடனான திருமண உறவும் நீண்ட ஆண்டுகள் நீடிக்கவில்லை.

பத்ம லக்ஷ்மி யார்?
தொடர்ந்து இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கா மாடலான பத்ம லக்ஷ்மியை திருமணம் செய்தார். ஆனால் இவர்களின் திருமணம் மூன்று ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் பத்ம லஷ்மி - சல்மான் ருஷ்டி இடையிலான இருந்த வயது வித்தியாசம் 23 என்பது அனைவருக்கும் ஆச்சரியமளித்தது. அமெரிக்கா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரபலமான பத்ம லக்ஷ்மி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சல்மான் ருஷ்டியின் உடல்நலம் குறித்து அறிய வந்தது பல்வேறு தரப்பினரின் கவனத்தை திருப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications