தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை அள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! மேலும் 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
நியூயார்க்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். சமீபத்தில் சில நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 1991ம் ஆண்டில் தாராளமயமாக்குதல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிப்பதில், தனியார் துறையின் பங்கு அதிகரிக்க ஆரம்பித்தது.

தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களிடையே போட்டி உருவானபோது தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டது. இந்த தொழில் கொள்கைதான் மாநிலத்தின் புதிய தொழிற்சாலைகள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது. தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் மோட்டார் வாகனத் தொழிற்புரட்சிக்கு இத்தொழில் கொள்கை வழிவகுத்தது.
தொழில் வளர்ச்சியினை மாநிலத்தில் துரிதமாக்கியது, பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பெருந்திட்டங்களை ஈர்ப்பதற்கு வழிவகுத்தது. இப்பெருந்திட்டங்களைச் சார்ந்து உதிரி, பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாகும் சூழ்நிலை உண்டானது. எனவே அரசின் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டது.
அதாவது, “உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைந்து, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வேண்டும்” என்கிற கொள்கையோடு தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இதனை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பல அந்நிய முதலீடுகளை மாநில அரசு ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சில முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை உறுதி செய்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு மேலும் சில தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சான் பிரான்ஸிக்கோ சென்ற முதல்வருக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிறப்பான வரவேற்பளித்திருந்தனர்.
பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு முதலீட்டாளர்கள், முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்படி, ஈல்டு என்ஜினியரிங், மைக்ரோ சிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் தொழில் மையங்களை அமைக்க உள்ளன.
இதனை தொடர்ந்து இன்று மேலும் இரண்டு நிறுவனங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன. அதாவது மின்மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 3.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முனைப்போடு எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக உருவாகி வருகிறது. தொழில் வளர்கிறது என்றால் மாநிலம் வளர்கிறது, அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலமாக மாநிலத்தின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க நுட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் 29ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்..
30ம் தேதி ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், 31ம் தேதி ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து. 3ம் தேதி அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் விவரங்கள்: ஈட்டன் கார்ப்பரேஷன் (Eaton Corporation ) நிறுவனம் என்பது தரவு மையம், பயன்பாடு, தொழில்துறை, வணிகம், இயந்திர கட்டிடம், குடியிருப்பு, விண்வெளி மற்றும் இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனமாகும். குடியிருப்பு, வணிக கட்டிடம், மின்சார வாகனங்கள், தரவு மையம் மற்றும் eVTOL வாகனங்களுக்கான ஆற்றல் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் நுகர்வுக்கு அவற்றின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் தலைமையகங்கள் அயர்லாந்து நாட்டின் டப்ளின் மற்றும் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் பீச்வுட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. உலகளவில் 35 நாடுகளில் சுமார் 208 இடங்களில் உற்பத்தி வசதிகள் கொண்ட பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில், ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு. உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில். ஈட்டன் நிறுவனத்தின் குளோபல் எனர்ஜி தலைவர் மேத்யூ ஹாக்மேன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அஷ்யூரன்ட் நிறுவனம்: அஷ்யூரன்ட் நிறுவனம் (Assurant, Inc.) பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் அட்லாண்டாவை தலைமையிடமாக கொண்டு இடர் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. சொத்து, விபத்து, நீட்டிக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு போன்ற பலவிதமான சிறப்பு மற்றும் முக்கிய சந்தை காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.
அஷ்யூரன்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில், அஷ்யூரண்ட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே அஷ்யூரண்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், அஷ்யூரண்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் பிஜு நாயர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications