விட்டுக் கொடுக்காத ஈரான்.. மீண்டும் வெடிக்கும் போர்? எனக்கு மனசு ஒப்பலப்பா! டிரம்ப் சொன்ன வார்த்தை!
நியூயார்க்: மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவு மீண்டும் கடுமையாக மாறியுள்ளது. இரு நாடுகள் இடையே போர் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருப்பதாக ஈரான் ராணுவத்தின் உயரதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரான் வலியுறுத்தும் அமைதிக்கான நிபந்தனைகளில் தனக்கு அதிருப்தி அளிப்பதாக என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டது.

இதன் பின்னர், இரு தரப்பும் இடைக்கால போர்நிறுத்தத்தில் ஒப்புக்கொண்டிருந்தன. ஆனால் தற்போது அந்த அமைதி சீர்குலையும் அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீராக இயங்க விட வேண்டும், ஈரான் கப்பல்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
ஈரான் அமெரிக்கா மோதல்
இதற்குப் பதிலாக, தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனைகள் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு ஏற்றதாக இல்லை. "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்தாலும், ஈரான் முன்வைத்த நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லை" என்று ட்ரம்ப் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், ஈரான் அரசின் முடிவுகள் ஒருங்கிணைந்ததாக இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மீண்டும் வெடிக்கும் போர்?
இந்த நிலையில், இரு நாடுகள் இடையே போர் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருப்பதாக ஈரான் ராணுவத்தின் உயரதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி முகமது ஜாபர் ஆசாதி, அமெரிக்கா எந்த ஒப்பந்தத்தையும் முழுமையாக பின்பற்றிய வரலாறு இல்லை என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருந்த தற்காலிக அமைதி நிலை நீடிக்காது என்றும், மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தைகளும் எந்த முடிவையும் எட்டாமல் முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய அளவில் தென்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும் நேரடியாக உணரப்படுகிறது.
எரிவாயு சிலிண்டர் விலை
வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை திடீரென உயர்ந்திருப்பதும் இதற்கே காரணமாகக் கூறப்படுகிறது. அரசியல் வல்லுநர்கள் கூறுகையில், அமெரிக்கா - ஈரான் மோதல் நீடித்தால் உலக பொருளாதாரத்தில் பெரிய அதிர்ச்சி ஏற்படும். குறிப்பாக எரிசக்தி விலைகள் மேலும் உயரும் அபாயம் உள்ளது" என்று எச்சரிக்கின்றனர். ற்காசியாவில் நிலவும் இந்த பதற்ற நிலை எப்போது குறையும் என்பது தெரியாத சூழலில் உள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தைகள் வெற்றியடையுமா, அல்லது மீண்டும் போர் வெடிக்குமா என்ற கேள்வி உலக நாடுகளையே கவலையில் ஆழ்த்தியுள்ளது.













Click it and Unblock the Notifications