ஒரு வழியா முடிஞ்சது.. அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வந்த அரசு துறைகள்! முடக்கத்தின் பின்னணி என்ன?
நியூயார்க்: அமெரிக்காவில் அரசு முடக்கம் ஏற்பட்டு 40 நாட்களைக் கடந்த நிலையில், பல துறைகள் செயலிழந்தன. விமான சேவை உள்ளிட்டவையும் முடங்கியிருந்த நிலையில், 43 நாட்களுக்குப் பின் அமெரிக்க அரசுத் துறைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டதன் மூலம், நீண்டநாள் முடக்கம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இந்த முடக்கத்தின் பின்னணி? என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
அமெரிக்க அரசின் நிதியாண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ல் முடிகிறது. அடுத்த நிதியாண்டுக்கான செலவுத் திட்டம் அக்.1ம் தேதி தொடங்கும். அந்த புதிய மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறைந்தது 60% உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஆனால் இந்த ஆண்டு, ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் பல்வேறு கொள்கை விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளால் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக, முன்னாள் அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய மருத்துவக் காப்பீட்டு திட்டமான 'ஒபாமா கேர்' குறித்து கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.
அமெரிக்க அரசு முடக்கம்
அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி, எல்லை பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்ற கட்டுப்பாடு போன்ற அம்சங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும் என வலியுறுத்தியது. அதேசமயம், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக, நிதி மசோதாவுக்கு தேவையான 60 சதவீத வாக்குகள் கிடைக்காததால், அரசுத் துறைகள் முடங்கியன. 43 நாட்கள் நீடித்த இந்த முடக்கம் அமெரிக்க வரலாற்றில் நீண்ட அரசுத் துறை முடக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப்
இதனால் பல துறைகள் வேலை நிறுத்தம் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டன. அத்தியாவசிய துறைகளான பாதுகாப்புப் படைகள், விமானக் கட்டுப்பாட்டு அறைகள், மருத்துவம் போன்றவை குறைந்த பணியாளர்களுடன் இயங்கின. ஆனால் ஊதியம் வழங்கப்படாததால், அத்துறையினரும் பணிக்கு வராமல் இருந்தனர். இதனால் விமான போக்குவரத்து உள்ளிட்ட பல முக்கிய சேவைகள் தடைபட்டன. ஆனாலும், அதிபர் டிரம்ப் தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி குறையக் கூடாது என்று வலியுறுத்தினார்.
ஜனநாயகக் கட்சி
எனினும், அரசுத் துறை முடக்கம் காரணமாக பொதுமக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது. இதையடுத்து, சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை மீறி, சமரசத்திற்கு தயாரானார்கள். இதன் அடிப்படையில், புதன்கிழமை செனட் அவையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 222 பேர் ஆதரவாகவும், 209 பேர் எதிராகவும் வாக்களித்தனர். உடனடியாக, ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப் மசோதாவுக்கு கையெழுத்திட்டார்.
அரசு மீண்டும் தொடக்கம்
இந்த நிகழ்வின் போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்," கடந்த 43 நாட்களாக, சட்டவிரோத குடியேற்றத்துக்காக கோடிக்கணக்கான டாலர்களை பறிக்க முயன்ற ஜனநாயகக் கட்சி அரசை முடக்கியது. ஆனால் இன்று, மிரட்டலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்ற உறுதியை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். இதன் மூலம், நாளை காலை முதல் அனைத்து அரசுத் துறைகளும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அரசியல்
43 நாட்கள் நீண்ட அரசுத் துறை முடக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், அரசு ஊழியர்களும், பொது சேவைகளும் வழக்கமான நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த 43 நாள் முடக்கம், டிரம்ப் அரசின் எதிர்கால நம்பகத்தன்மையையும், வரும் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் எனும் கருத்து அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications