மோசடி நடக்கிறது.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்.. டிரம்ப் அதிரடி வழக்கு.. பரபர குற்றச்சாட்டு!
நியூயார்க்: பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார். வெறும் 214 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று டிரம்ப் பின்னடைவை சந்தித்து உள்ளார்.
ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 264 வாக்குகளை பெற்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார். பிடன் வெற்றிபெற இன்னும் 6 வாக்குகளே தேவை என்ற நிலை உள்ளது.

எப்படி
பிடனின் இந்த திடீர் முன்னிலைக்கு அவர் சில முக்கிய மாகாணங்களில் வென்றதே காரணம் ஆகும். விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய தொகுதிகளில் பிடன் வெற்றிபெற்றார். கடைசியாக எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் பிடன் முன்னிலை வகித்து.. விஸ்கான்சின் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், மிச்சிகனில் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றார்.

என்ன
இந்த நிலையில் இந்த தபால் வாக்கெடுப்பில் முறைகேடு நடந்துவிட்டது. எங்கள் தரப்பு பிரதிநிதிகளையே கண்காணிக்க அனுமதிக்கவில்லை. எங்களை ஏமாற்றிவிட்டனர் என்று டிரம்ப் கூறியுள்ளார். தனக்கு ஆதரவான தபால் வாக்குகளை பதுக்கிவிட்டு, பிடனுக்கு ஆதரவான பொய்யான வாக்குகளை கொண்டு வருகிறார்கள் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

தோல்வி
இந்த இரண்டு மாகாணங்களில் டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார். பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினாவில் நூலிழையில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். ஆனால் இந்த பகுதிகளில் தபால் வாக்கு பிடனுக்கு சாதகமாக செல்ல வாய்ப்புள்ளது. இதனால் மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்று டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்கு
இன்னொரு பக்கம் விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்த கோரியும் வழக்கு தொடுத்துள்ளார். எங்கள் குழுவின் கண்காணிப்பில் வாக்கு எண்ணிக்கை நடத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். அந்தந்த மாகாணங்களில் தனித்தனியாக டிரம்ப் இதற்காக வழக்கு தொடுத்துள்ளார். இதனால் மொத்தமாக தேர்தல் முடிவை டிரம்ப் மறுக்க வாய்ப்புள்ளது.

பிடன்
இன்னொரு பக்கம் ஜோ பிடன்.. எங்கள் வெற்றி உறுதியாகி வருகிறது. நம்பிக்கையோடு இருங்கள். நாம் வெற்றிபெற போகிறோம். உண்மையை யாரும் அமைதியாக்க முடியாது. நான்தான் வெற்றியாளர் என்று சொல்லவில்லை. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடியும் போது... நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பிடன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications