ஈரானை அழிக்கும் டிரம்ப்? அமெரிக்கா அனுப்பிய ராட்சச விமானம்.. அணுஆயுத தாக்குதலுக்கு வாய்ப்பா? ஷாக்
நியூயார்க்: ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயன்று வருவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. அமெரிக்கா அழைத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் செவிசாய்க்கவில்லை. இதனால் இருநாடுகள் இடையே மோதல் உச்சமடைந்துள்ள நிலையில் குண்டு வீச்சுக்கு பெயர் போன அதேவேளையில் கொலைவெறி தாக்குதல் நடத்தும் பி2 ரக ராட்சச போர் விமானங்களை குவித்து வருகிறது. ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. குறிப்பாக டொனால்ட் டிரம்புக்கும், ஈரானுக்கும் இடையே தனி பஞ்சாயத்தே உள்ளது. டிரம்ப் அமெரிக்க அதிபராக முதல் முறையாக இருந்தபோது ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். அதோடு கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது அமெரிக்கா - ஈரான் இடையே பிரச்சனை என்பது இன்னும் முடியவில்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் தான் ஈரான் தற்போது ஒரு விஷயத்தை முன்னெடுக்கிறது. ஈரானிடம் தற்போது அணுஆயுதம் என்பது இல்லை. இந்த அணுஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரம் காட்டி வருகிறது.
ஈரான் - அமெரிக்கா பிரச்சனை
ஈரானின் இந்த அணுஆயுத திட்டத்துக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் ஒரு காரணம். மற்றொரு காரணம் என்னவென்றால் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று இருப்பது தான். அமெரிக்கா, இஸ்ரேலுடன் ஈரானுக்கு மோதல் உள்ளது. அதேபோல் டிரம்புக்கும், ஈரான் மீது தனிப்பட்ட பகை உள்ளது. இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து எப்போது வேண்டுமானாலும் தங்கள் நாட்டை தாக்கலாம் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் தங்களின் படை பலத்தை வலிமைப்படுத்தி வருகிறது ஈரான். இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தான் அணுஆயுதத்தை உற்பத்தி செய்யும் பணியில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஆனால் இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்கா மட்டுமின்றி அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் தனிப்பெரும் சக்தியாக மாறும். இது ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹவுதி, ஹெஸ்புல்லா அமைப்புகளை இன்னும் தீவிரமாக செயல்பட வைக்கும். இதனால் அமெரிக்கா ஒரேயடியாக ஈரானின் அணுசக்தி திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அணுசக்தி திட்டத்தின் மூலம் அணுஆயுதம் தயாரிக்க கூடாது என்பது தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார்.
விமானத்தை குவிக்கும் அமெரிக்கா
இதுதொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்து ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு, டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதினார். அதில் 2 மாதம் காலக்கெடுவும் வழங்கினார். ஆனால் ஈரான் அதனை புறக்கணித்துள்ளது.
இதற்கிடையே தான் தற்போது ஈரானுக்கு எதிராக பெரிய ராட்சசனை களமிறக்கி உள்ளது அமெரிக்கா. இந்த ராட்சசனின் பெயர் என்பது B 2 Bombers. பி-2 ஸ்பிரிட் அல்லது நோர்த்ரொப் குரும்மன் பி-2 ஸ்பிரிட் என்றும் இந்த போர் விமானத்தை அழைப்பார்கள். இந்த ரகத்தை சேர்ந்த 5 விமானங்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
இது இலக்குகளை நோக்கி துல்லியமாக வெடிகுண்டுகளை வீசும் போர் விமானமாகும். இந்த போர் விமானம் வெறும் வெடிகுண்டுகள் மட்டுமின்றி அணுஆயுதங்களையும் சுமந்து சென்று துல்லியமாக இலக்கை அழிக்கும் திறன் கொண்டது. இந்த பி 2 பாம்பர்ஸ் வகை போர் விமானத்தை அமெரிக்கா தற்போது தயாராக வைத்துள்ளது. இந்த போர் விமானங்கள் இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா எனும் பவளத்தீவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்காவின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.
விமானத்தின் பின்னணி
இங்கிருந்து அமெரிக்காவால் மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு எதிராக தாக்குதலை நடத்த முடியும். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானையும் இங்கிருந்து குறிவைத்து அமெரிக்காவால் எளிதாக ‛அட்டாக்' செய்ய முடியும். கடந்த வாரம் கூட இந்த விமானங்களை பயன்படுத்தி தான் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளை அமெரிக்கா பதம் பார்த்தது. அமெரிக்க போர் விமானங்களை நிலைநிறுத்தி உள்ள டியாகோ கார்சியா தீவு என்பது ஈரானில் இருந்து 2300 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த விமானம் மணிக்கு 1,010 கிமீ வேகத்தில் பறக்க கூடியது. இது ஸ்டெல்த் வகையை சேர்ந்தது. இதனால் ரேடாரில் சிக்காது. அதேபோல் நிற்காமல் நீண்டதூரம் பறக்கும் தன்மை கொண்டது. இதனால் அமெரிக்காவால் எளிதாக ஈரானை தாக்க முடியும்.
ஏற்கனவே ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கான இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இப்படியான சூழலில் அமெரிக்கா நேரடியாக பி2 ரக குண்டுவீச்சு விமானங்களை ஈரான் அருகே நிலைநிறுத்தி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஈரானுக்கு கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. டிரம்பின் கடைசி உத்தரவுக்காக அந்த விமானத்தின் விமானிகள் காத்திருக்கின்றனர் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
ஈரான் கையில் 2 விஷயம்
இப்போது ஈரான் கையில் 2 விஷயங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு செவிசாய்ப்பது. இல்லாவிட்டால் அமெரிக்காவின் கொடூர தாக்குதலை எதிர்கொள்வது. டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் இரண்டு முக்கிய விஷயம் உள்ளது. ஒன்று ஈரான் அணுஆயுதம் தயாரிப்பை கைவிட வேண்டும்.
2வது ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு மற்றும் உதவி அளிக்க கூடாது என்ற 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஏற்கனவே செங்கடல் பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்புகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனில் அமெரிக்கா நேரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து தான் ஈரானுக்கு எதிராக பி-2 ரக குண்டு வீச்சு போர்விமானங்களை அமெரிக்கா குவித்துள்ளது.
அழிக்க திட்டமா?
மேலும் டொனால்ட் டிரம்ப் ஈரானால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறார். ஈரான் தன்னை கொன்றால் அந்த நாடு மொத்தமாக இருக்காது. அதுதொடர்பாக ஏற்கனவே தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் ஏற்கனவே பொதுவெளியில் அறிவித்தார். இதனால் டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை என்பது ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த பி-2 ரக குண்டுவீச்சு விமானங்கள் வெடிகுண்டு மட்டுமின்றி அணுஆயுதத்தை சுமந்து செல்லும் என்பதால் ஈரானை அழிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளாரா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications