யாரோ நோட்டமிடுறாங்க.. இந்த போட்டோவை பாருங்களேன்! இணையத்தில் வெளியான "மார்ஸ்" புகைப்படத்தால் பரபரப்பு
நியூயார்க்: ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தால் நெட்டிசன்கள் பலர் குழம்பி போய் இருக்கிறார்கள்.
நாசா செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரோவர்கள் மூலமும், ஆர்பிட்டர்கள் மூலமும் நாசா அங்கு நிறைய ஆய்வுகளை செய்து வருகிறது.
அதேபோல் ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகளும் கூட செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

ஐரோப்பா
இந்த நிலையில்தான் ஐரோப்பாவின் விண்வெளி ஆய்வு மையமான European Space Agency (ESA) தனது ஆர்பிட்டர் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. மார்ஸ் எக்ஸ்பிரஸ் எனப்படும் ஆர்பிட்டர் மூலம் எடுக்கப்பட்டு, நேற்று இந்த புகைப்படம் ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் Aonia Terra என்ற பெயரிடப்பட்ட பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் இது.

பார்க்க கண் மாதிரி
இந்த புகைப்படம் நெட்டிசன்கள் பலரை குழப்பி உள்ளது. இந்த புகைப்படம் ஏன் கவனம் பெறுகிறது என்றால்.. இது பார்க்க அப்படியே கண் போல இருக்கிறது. அதாவது பெரிய மனித கண்களை அங்கே வைத்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இதுவும் பார்க்க காட்சி அளிக்கிறது. ஆப்ரிக்காவின் சஹாராவில் இருக்கும் கண் போன்ற அமைப்பை "Eye of the Sahara" என்று அழைப்பார்கள். அங்கு மிகப்பெரிய குழிகளுடன் வட்டமாக கண் போன்ற அமைப்பு காணப்படுகிறது.

ஒப்பீடு
செவ்வாய் கிரகத்தில் காணப்படும் இந்த கண் போன்ற அமைப்பும் அதே தோற்றத்தில் இருக்கிறது. இதனால் இந்த செவ்வாய் கிரக பகுதியை பலரும் "Eye of the Sahara" உடன் ஒப்பிட்டு வருகிறார்கள். செவ்வாயில் இருக்கும் இந்த கண் போன்ற பகுதிக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்த பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் இருந்திருக்கலாம் என்று நம்புவதாக ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நரம்புகள்
மனித கண்களில் நரம்புகள் ஓடுவது போல இதிலும் கோடுகள் உள்ளன. இவை தண்ணீர் பாய்ந்தோடிய கோடுகளாக இருக்கலாம் என்று ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. செவ்வாயில் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் ஓடியதாக நம்பப்படும் நிலையில்தான் இந்த புகைப்படம் வெளியாகி உள்ளது, இந்த கண் போன்ற அப்பகுதிகள் சில கருப்பு நிற புள்ளிகள் உள்ளன. அதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

படிமங்கள்
மண் தங்கி ஏற்பட்ட படிமங்களாக இருக்கலாம் அல்லது வேறு சில வேதிப்பொருட்களின் அச்சாக இருக்கலாம். இல்லை என்றால் எரிமலை குழம்புகள் சென்ற தடமாக இருக்கலாம் என்று ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த கண் போன்ற உருவத்தை நெட்டிசன்கள் பலரும் வியப்புடன் பகிர்ந்து வருகிறார்கள். யாரோ செவ்வாயில் இருந்து பெரிய கண் மூலம் நம்மை கண்காணிப்பது போல இருக்கிறது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications