12 ஆவது நாளாக தேடப்படும் டி23.. இன்னும் சிக்கவில்லை.. நவீன சென்சார் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம்!
நீலகிரி: புதரில் பதுங்கியுள்ள வனவிலங்குகளின் வெப்பநிலையை கொண்டு சென்சார் மூலம் கண்டறியும் அதிநவீன கேமராவை கொண்டு புலியை தேடும் பணி இன்று காலை முதல் துவங்கியது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் நான்கு நபர்களை கொன்ற T23 என அழைக்கப்படும் ஆட்கொல்லி புலியை 80-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து 11 நாட்களாக தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் 12-வது நாளான இன்று வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இன்று காலை முதல் அந்த புலியை தேடும் பணியில் வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

85 க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள்
குறிப்பாக 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்ட அதிரடி படை யினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்காரா வனப்பகுதி
நேற்று காலை அந்த புலியானது சிங்கார வனப்பகுதியில் தென்பட்ட நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை அந்த பகுதியில் இருந்து T23 புலி வனத்துறையினருக்கு போக்கு காட்டி வேறு வனப்பகுதிக்கு சென்ற நிலையில் இன்று காலை முதல் மீண்டும் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

4 இடங்கள்
புலி நடமாட்டம் உள்ள அதே பகுதியில் நான்கு இடங்களில் மரத்தின் மீது பரன்களை அமைத்து அதன் மீது கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் கண்காணித்து வருகின்றனர். தற்போது அடுத்தகட்ட முயற்சியாக புதர்களில் பதுங்கி இருக்கும் புலியை கண்டறிவதற்கான அதிநவீன 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ட்ரோன் கேமராவை கொண்டு வனப்பகுதிக்குள் சென்று புலியை கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவையிலிருந்து வனத்துறையினர்
இதற்கான 3 பேர் கொண்ட குழு கோவையில் இருந்து வருகை தந்து சிங்காரா வனப்பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்
T23 புலி தனது வாழ்விடத்தை விட்டு வெளியேறிய பிறகு தனது உணவு தேவைக்காக கூடலூர் மேபீல்டு எஸ்டேட் முதல் முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியான மசினகுடி வரை சுமார் 21 கி.மீ கடந்து வந்த அந்த பாதையின் வரைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

3 மணி நேரத்தில் கடந்த புலி
21கி.மீ தூரத்தை T23 புலி மூன்று மணி நேரத்தில் கடந்து வந்துள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்கள். வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோ வரை இருக்கும் என்பதால் அதற்கு பிரச்சினை இருக்காது என்கிறார்கள் வனத்துறையினர்.












Click it and Unblock the Notifications