நீலகிரியில் ஒரே பரபரப்பு.. அப்ப கொடநாடு எஸ்டேட்டில க்ளூ கிடைச்சிருச்சா? இன்று ஊட்டி கோர்ட்டில் கேஸ்
ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தடயங்களை அழிக்க முயற்சித்தாக அளிக்கப்பட்ட புகாரில், கொடநாடு எஸ்டேட்டில் 20 பேர் சிறப்பு குழு நேற்று ஆய்வு செய்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் உள்ளது. அங்கு, கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளை சம்பவமும் அரங்கேறியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் உட்பட கேரளாவை சேர்ந்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பரபர விசாரணை: ஆனால், இதில், கனகராஜ் விபத்தில் உயிரிழந்துவிட்டார்... தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து கொண்டிருககிறது.. அந்தவகையில், இதுவரைக்கும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி 23ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் கோர்ட்டில் சார்பாக நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
மனு தாக்கல்: இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் ஒரு மனுவையும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "சிபிசிஐடி போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர்கள் குழுவினர், கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.
அறிக்கை தாக்கல்: இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து வீடியோ பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படியே, நேற்றைய தினம் சிபிசிஐடி போலீசார், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்றார்கள்.. அங்கு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலும் ஆய்வு செய்தார்கள். அப்போது, கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போதும், இப்போதும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் 3 மணி நேரத்திற்கும் மேல் ஆய்வு செய்தார்கள்.
பரபரப்பு: இந்நிலையில், இந்த வழக்கு இன்று ஊட்டி கோர்ட்டில் மறுபடியும் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது நேற்றைய தினம் ஆய்வு நடத்திய ரிப்போர்ட்களை, ஊட்டி கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் சமர்ப்பிக்கப்பார்கள் என்று தெரிகிறது. இதனால் கொடநாடு விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications