உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும்.. கோடநாடு வந்தது ஏன்? கண்கலங்கியபடி சசிகலா பேட்டி
நீலகிரி: 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கோடநாடு வருகை தந்த சசிகலா, அதிமுக ஒன்றுபட முயற்சி செய்து வருவதாகவும், அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் எனவும் கண்கலங்கியபடி பேட்டியளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுக்க எந்த எஸ்டேட்டில் தங்குவது வழக்கம். குறிப்பாக சென்னையில் கோடை காலங்களில் நீலகிரியில் உள்ள கொடநாடுக்கு சென்று ஜெயலலிதா செல்வார். ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் சென்று வருவார். கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு பின் ஜெயலலிதா கோடநாடு வந்தார்.

அதன்பிறகு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றன. கோடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா இரண்டுமே காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் உள்ளது.
கண்கலங்கிய சசிகலா: இந்த நிலையில், தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா முதல் முறையாக இன்று கோடநாடு வருகை தந்தார். கோடநாடு வந்த சசிகலாவுக்கு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காரில் இருந்தபடியே சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். கண்கலங்கியபடி சசிகலா பேட்டியின் போது கூறியதாவது:
ஜெயலலிதாவுடன் இங்கு வந்திருக்கிறேன். இன்று ஜெயலலிதால் இல்லாமல்.. ஜெயலலிதாவுடன் நினைவாகவே இங்கு வந்திருக்கிறேன். எங்களுடைய தோட்டத்தில் உள்ளவர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று எண்ணம் வந்திருக்கிறது. ஆனால் இது மாதிரி ஒரு சூழல் ஏற்படும் என்று நான் நினைத்ததே இல்லை. நிச்சயமாக எங்களுடைய தோட்டத்திலே நீண்ட காலமாக சின்ன வயதில் காவலாளியாக இருந்த நல்ல மனிதர்..
அதிமுக ஒன்றுபட வேண்டும்: அவர் உயிரிழந்து உள்ளார். நிச்சயமாக உண்மையாக குற்றவாளிக்கு ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையை வாங்கி கொடுப்பார். ஜெயலலிதாவுக்கு இங்கு சிலை வைக்கப்படுகிறதாக தகவல் வெளியாகியுள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, "இதற்கான பூமி பூஜை செய்துவிட்டு இந்த பணியை செய்வோம்" என்றார்.
மேலும் அதிமுக ஒன்றிணை வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து சசிகலா கூறியதாவது:- அதிமுக ஒன்று பட நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து போகவேண்டும். இது தான் அரசியலுக்கு நல்லது என்று நினைக்கிறேன். இந்த மாதிரி ஒரு சூழ்நிலை, காலகட்டம் வரும் போது அது நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பூமி பூஜை: இதனிடையே, கோடநாடு பங்களா அருகே ஜெயலலிதாவின் சிலை அமைக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளதாகவும் பங்களாவில் அமைக்கப்படும் ஜெயலலிதா சிலையை வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த தினம் அன்று திறந்து வைக்க சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications