குன்னூருக்குள்ளே சர்ப்ரைஸ் "விருந்தாளி".. வீட்டு வாசற்படியிலேயே நின்ற அந்த உருவம்.. நடுங்கிய நீலகிரி
ஊட்டி: வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதை பார்க்கிறவர்கள் பலரும் திகைத்து போய் நின்றுவிட்டார்கள்.. என்ன காரணம்?
நீலகிரி மாவட்டம், பெரும்பாலும் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். அதனால் இங்கு யானை, புலி, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நிறையவே வாழ்ந்து வருகின்றன. சில நேரங்களில் இவைகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள்ளும் நுழைந்து விடுகின்றன.

இதில் அதிகமாக ஊருக்குள் வருவது கரடிகளாகவே உள்ளன.. இதற்கு அடுத்தபடியாக பைசன் எனப்படும் காட்டெருமைகளும் சாலைகளில் உலாவரும். ஆனால், கரடிகளின் அட்டகாசத்தைதான் தடுத்து நிறுத்த முடிவதில்லை.
குன்னூர்: கடந்த மாதம்கூட, குன்னூர் பகுதிகளுக்குள் புகுந்துவிடும் கரடிகள், அங்கிருக்கும் பூட்டியிருந்த கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விடுகிறது. கோயில்கள் எங்காவது கண்ணில் தெரிந்தால், உடனே அந்த கோயிலுக்குள்ளும் நுழைந்து விடுகிறது கோயிலினுள் ஏற்றி வைத்திருக்கும் விளக்குகளையும் கீழே தள்ளி விடுவதுடன், அந்த விளக்குகளில் உள்ள எண்ணெய்களையும் முழுசும் குடித்துவிட்டுதான், நடையை கட்டுகிறது.
இந்நிலையில், குன்னூரில் ஒரு வீட்டு வாசலில் கருஞ்சிறுத்தையே வந்துவிட்டது.. அந்த வீட்டிற்கு வெளியே கருஞ்சிறுத்தை சுற்றித் திரிந்தது அங்கிருந்த வீடியோ ஒன்றில் பதிவாகி உள்ளது.. ஐஎஃப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்..
வீட்டு வாசற்படி: அந்த சிறுத்தை கருகருவென வீட்டு வாசற்படியிலேயே இங்குமங்கும் நடமாடுகிறது.. அந்த உருவத்தை பார்க்கவே நடுநடுங்கி போய்விடுகிறது.. இந்த வீடியோவை பார்த்த பலரும், கதிகலங்கி போய்விட்டார்கள்.. இதுவரை அந்த வீடியோவை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளார்கள்..

இப்படித்தான், கடந்த வருடமும் ஆகஸ்ட் மாதம் கருஞ்சிறுத்தை நடமாடியதாம். அந்த வீடியோவையும், ஐஎஃப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பதிவிட்டிருக்கிறார். 2021 மார்ச் மாதம், நள்ளிரவில், குடியிருப்பு பகுதிக்குள் அந்த கருஞ்சிறுத்தை வந்துள்ளது.. தெருவில் இருந்த நாயையும் வாயில் கடித்து தூக்கி கொண்டு ஓடிவிட்டது. இதுவும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
கருப்பு சிறுத்தைகள்: கருப்பு சிறுத்தைகள், ஜாகுவார் மற்றும் சிறுத்தைகள் குடும்பத்தை சேர்ந்தவை... இந்த கருப்பு நிறம், இந்த விலங்குகளை ஒரு அரிய இனமாகவே வைத்திருக்கிறது.. இந்த கருஞ்சிறுத்தைகள் கூச்ச சுபாவம் கொண்டவையாம். அதனால், காட்டுக்குள்ளேயே நடமாடும் வனஆர்வலர்கள் கண்ணில்கூட, இந்த கருஞ்சிறுத்தைகள் படுவதில்லையாம்.
"உங்க வீட்டுக்கு வாசற்படிக்கே வந்துவிட்டதே? நீங்கள் லக்கி மேன்".. என்றெல்லாம் இணையவாசிகள் பர்வீனை பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்.
இது ஒருபக்கமிருந்தாலும், கரடி போய், காட்டெருமை போய், கருஞ்சிறுத்தையும் வீடு வரைக்கும் வந்துவிட்டதே? என்று நடுநடுங்கி போயிருக்கிறார்கள் நீலகிரி மலைமக்கள்..!!












Click it and Unblock the Notifications