4 நாட்கள் பயணமாக இன்று நீலகிரி வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு.. ஊட்டி நிகழ்ச்சி தான் ஹைலைட்
ஊட்டி: 4 நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார் . இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை விமான நிலையம் வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்கிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி.உதகை ஆளுநர் மாளிகையில் பழங்குடியினப் பெண்களுடன் உரையாடல் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழகத்திற்கு இன்று வருகிறார்.

இன்று டெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு விமானம் மூலம் கோவைக்கு புறப்படும் அவர், கோவைக்கு வந்து அங்கிருந்து காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்து, ராஜ்பவனில் தங்குகிறார்.
நவம்பர் 28ம் தேதியான நாளை கார் மூலம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு வரவேற்பு, ராணுவ மரியாதை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக அங்கு போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் நவம்பர் 30ம் தேதி தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் செல்லும் குடியரசுத் தலைவர் , அங்குள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையையொட்டி நீலகிரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications