போட்டுக்கொடுத்த பாஜக - நாம் தமிழர்.. கட்டுக்கட்டாக திமுக பிரமுகரின் காரில் சிக்கிய பணம்! பரபரப்பு
நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பாஜக மற்றும் நாம் தமிழர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து திமுக பிரமுகரின் காரில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்திலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் போட்டியிடும் கோவை தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டனர்.
இந்நிலையில் தான் தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யலாம் என்பதால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் இன்று பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரை தொடர்ந்து பறக்கும்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் திமுக பிரமுகரின் காரில் இருந்து எட்டரை லட்சம் ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடந்தது.
அதாவது நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் வழங்குவதாக பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் பறக்கும்படையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து காரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கோத்தகிரி ஒன்றிய திமுக செயலாளர் நெல்லை கண்ணனின் காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.8.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரூ.8.50 லட்சம் பணம் எதற்காக காரில் வைக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. அதாவது வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைக்கப்பட்டு இருந்ததா? இல்லை பிற காரணங்களுக்காக பணம் வைக்கப்பட்டதா? என்பது பறக்கும் படையினர் விசாரணைக்கு பிறகு தான் தெரியும்.
நீலகிரி தொகுதியை பொறுத்தமட்டில் சிட்டிங் எம்பியாக உள்ள ஆ ராசா மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமாரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதுதவிர சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications