10% மட்டுமே உள்ள உயர்ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவம் - ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை
பாட்னா: ‛‛நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உள்ள மக்கள் இந்திய ராணுவத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். இது உன்னிப்பாக கவனித்தால் தெரியும்'' என்று பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசி உள்ளார். அவர் உயர்ஜாதியினரை மறைமுகமாக குறிப்பிட்டு பேசி இருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. பீகாரில் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் நவம்பர் 14ம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

பீகாரில் பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான் முதற்கட்டமாக நாளை மறுநாள் (நவம்பர் 16) 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நாட்டில் உயர் ஜாதியினர் குறைவாக இருந்தாலும் ராணுவத்தை அவர்கள் தான் கட்டுப்படுத்துகின்றனர் என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
நாட்டின் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால்(உயர்ஜாதியினர்) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இது தெரியும். நம் நாட்டில் தலித், மகா தலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் என்று பார்த்தால் 90 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் வருகின்றனர்.
இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களை எடுத்து பாருங்கள். அதில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள் (உயர் ஜாதியினர்)தான் இருப்பார்கள். அனைத்து பணிகளும் அவர்களுக்கு தான் செல்கிறது. அவர்கள் தான் ஆயுதப்படையை கட்டுப்படுத்துகின்றனர். உங்களால் மற்ற 90 சதவீத மக்கள் எங்கு உள்ளனர்? என்பதை கண்டுபிடிக்க முடியாது.
நாட்டின் 90 சதவீத மக்கள் தொகைக்கு உரிய இடமளிக்க வேண்டும். அவர்கள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய ஒரு இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம். காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டுள்ளது. இனியும் அதனை செய்வோம்'' என்றார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்தை பாஜகவினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். பாஜகவின் சுரேஷ் நகுவா கூறுகையில், ‛‛ராகுல் காந்தி இப்போது ஆயுதப்படையில் உள்ளவர்களின் ஜாதியை தேடிவருகிறார். நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதமாக இருக்கும் பிரிவினர் ஆயதப்படையை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார். ஏற்கனவே பிரதமர் மோடி மீதான அவரது வெறுப்பு நம் நாட்டில் உள்ள வெறுப்புக்கான எல்லையை கடந்து விட்டது'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
ராகுல் காந்தி நம் நாட்டின் ராணுவம், ஆயுதப்படையை பற்றி பேசுவது இது முதல் முறையல்ல. பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி, சீன படை வீரர்கள் நம் நாட்டின் படை வீரர்களை அருணாச்சல பிரதேசத்தில் தாக்குவதாக கூறியிருந்தார். இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. ‛நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டீர்கள்'' என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தான் மீண்டும் இந்திய ராணுவம் பற்றி ராகுல் காந்தியின் கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications