சர்ச்சையில் லாலு பிரசாத்தின் மூத்த மகன்! இப்போதான் இதெல்லாம் தெரியுதா? ஐஸ்வர்யா ராய் கேள்வி
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத், தனது மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கியிருந்தார். இந்த பிரச்சனை குறித்து விமர்சித்துள்ள தேஜ் பிரதாப்பின் மனைவியும், லாலுவின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய் (அபிஷேக் பச்சனின் மனைவியும் இவரும் வேறு வேறு) லாலு பிரசாத்தின் குடும்பத்தின் மீது சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நேற்று தேஜ் பிரதாப் பேஸ்புக் அக்கவுண்ட்டிலிருந்து போட்டோ ஒன்று பதிவேற்றப்பட்டிருந்தது. அது சில மணி நேரங்கள் கழித்து டெலிட் செய்யப்பட்டாலும், இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதான் இவரை கட்சியிலிருந்து லாலு நீக்க காரணமாகவும் இருந்தது.

இந்த பஞ்சாயத்து குறித்து ஜஸ்வர்யா ராய் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதாவது, "மகன் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார் என்பது குறித்து முன்பே தெரியுமா? ஆம் எனில் எல்லாம் தெரிந்துதான் எனக்கு அவரை திருமணம் செய்து வைத்தீர்களா? ஏன் என் வாழ்க்கையை நாசமாக்கினீர்கள்?
தேஜ் பிரதாப் குடும்பத்திற்கு இது எல்லாம் முன்னரே தெரியும். இருப்பினும் இந்த சதியை எல்லோரும் சேர்ந்து செய்திருக்கின்றனர். நான் அனைத்து விஷயத்தையும் ஊடகங்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன். விவாகரத்து பற்றிய செய்தியை கூட நான் இப்படித்தான் தெரிந்துக்கொண்டேன். இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோதெல்லாம் நான் தாக்கப்பட்டேன். அவமானப்படுத்தப்பட்டேன். அப்போது அந்த கட்சியின் சமூக நீதி எங்கே போனது?
இது ஒரு முழு நாடகம். இன்னும் கொஞ்ச நாட்களில் பீகார் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலுக்கான நாடகம்தான் இது. இதனை எனது மாமியாரும், தேஜ் பிரதாப்பின் அம்மாவுமான ராப்ரி தேவிதான் திட்டமிட்டிருக்க வேண்டும்" என்று விமர்சித்திருக்கிறார்.
தேஜ் தனது பேஸ்புக் பதிவில், கடந்த 12 ஆண்டுகளாக ஒரு இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு அதாவது 7 ஆண்டுகளுக்கு முன்னர் பீகார் முன்னாள் முதல்வர் தரோகா ராயின் பேத்தியான ஐஸ்வர்யா ராய் உடன் தேஜ் பிரதாப்புக்கு திருமணம் நடந்திருந்தது. ஆனால் இவருக்கும் இடையில் வெறும் இரண்டு ஆண்டுகளில் பஞ்சாயத்து வெடித்ததால் இருவரும் பிரிந்தனர்.
2020ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, லாலு குடும்பத்தின் அரசியல் எதிரியான நிதீஷ் குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா வலியுறுத்தி இருந்தார். இப்படி இருக்கையில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
தேஜ் பிரதாப்புக்கும், அவரது மனைவிக்கும் மட்டும்தான் செட் ஆகவில்லை என்று இல்லை. அவருக்கும் அவரது சகோதரரான தேஜஸ்வி யாதவுக்கும் கூட செட் ஆகாது. நான் கிருஷ்ணன். எனது சகோதரன் அர்ஜுனன். கிருஷ்ணன் இல்லாமல் அர்ஜுனனால் எதுவும் செய்ய முடியாது என்று ஓவராக தேஜ் பிரதாப் பில்டப் செய்து வந்திருந்தார். எனவே அவ்வப்போது இருவருக்கும் முட்டிக்கொள்ளும். இப்போது இந்த பஞ்சாயத்து, ஐஸ்வர்யா ராய் மூலம் பெரியதாக வெடித்து கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications