செழிப்பான பீகார்: கலாச்சாரத்தின் பிறப்பிடம்.. மனித குலத்தை வளர்த்தெடுத்த தொட்டில்!
பாட்னா: இந்தியாவின் மிக மெதுவான வளர்ச்சியை கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் பீகார் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், பீகாரின் உண்மை முகம் இது கிடையாது. மனித குலம் இத்தனை செழிப்பாக வளர்ந்திருக்கிறது எனில், அதற்கு பீகாரின் பங்களிப்பு இன்றியமையாதது என்றே சொல்லலாம். இந்த செய்தி பீகாரின் செழுமையையும், அதன் வரலாற்றை கால வரிசையில் விவரிக்கிறது.
பண்டைய பீகார் என்பது இன்றைய தேதியில் இருந்து சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது. சில ஆய்வாளர்கள் 30,000 ஆண்களுக்கு முன்பு இருந்தே பீகாரில் மனித நாகரிகம் இருந்தது என்று கூறுகிறார்கள்.

மனித நாகரிகத்தின் தொடக்கம்
பீகாரின் முங்கர் பகுதியில் சில குகைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்திருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. ஆய்வாளர்கள் இதை 'மெசோலிதிக் காலம்' என்று குறிப்பிடுகிறார்கள். மெசோலிதிக் காலம் என்பது 10,000-8,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலமாகும். அதாவது இடைக்கற்காலமாகும். இந்த காலத்தில் விவசாயம் கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதன் வேட்டையாடியும், உணவை சேகரித்தும் வந்திருந்தான்.
பீகாரில் இடைக்கற்கால மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக காய்மூர் (Kaimur), நவாடா (Nawada), ஜமுய் (Jamui) போன்ற மலைப்பகுதிகளில் முன்வரலாற்று கால பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஓவியங்கள் பெரும்பாலும் சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், விலங்குகள், தாவரங்கள், ஆறுகள் போன்ற இயற்கைக் கூறுகளைச் சித்தரிக்கின்றன. மேலும், வேட்டையாடுதல், ஓடுதல், நடனமாடுதல் போன்றவற்றையும் காட்சிப்படுத்துகின்றன.
இதன் சிறப்பம்சம் என்னவெனில், இந்த ஓவியங்கள் சில தென்னிந்திய ஓவியங்களுடனும், ஐரோப்பியாவில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த ஓவியங்களுடனும் ஒத்துப்போகின்றன.
இந்த மக்கள் அப்படியே பயணித்து புதிய கற்காலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இங்குதான் வேளாண் தொழில் தொடங்குகிறது. பீகாரில் ஓடும் பல நதிகளில் கங்கை மிக முக்கியமானது. கங்கை நதி பீகாரை சரி பாதியாக பிரிக்கிறது. இந்த நதியை ஒட்டிய பகுதியில் நீர் எப்போதும் இருப்பதால் வேளாண் தொழில் சிறப்பாக நடந்தது. அதற்கு முன்னர் வரை உணவுக்காக நாடோடியாக திரிந்த மனிதன், இந்த கட்டத்தில் ஓரிடத்தில் தங்கி இருக்க ஆரம்பித்தான்.
வேளாண், மீன் பிடித்தல் உணவு பற்றாக்குறையை போக்கியது. இதனையடுத்து, மனித குலம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி சென்றது. அதாவது வேளாண் தொழில் புதிய பாதையை நோக்கி முன்னேறியது. அரிசியுடன் சேர்த்து கோதுமை, பாசிப்பயறு, மசூர், பார்லி உள்ளிட்ட பயிர்களும் பயிரிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 'மகாஜனபதங்கள்' உருவாகின.
மகாஜனபதங்கள் என்றால் என்ன?
'மகா' என்றால் பெரிய என்று பொருள். 'ஜனபதா' என்றால் மக்கள் வாழும் பகுதி என்று அர்த்தம். கூட்டமாக அதிக அளவில் மக்கள் வாழும் பகுதியைதான் மகாஜனபதங்கள் என்று அழைப்பார்கள். இதுவே பின்னர் அரசு ஆட்சியாகவும் மாறியது. பீகாரில்தான் 'மகதம்' எனும் மகாஜனபத உருவானது. இது பின்னாட்களில் மௌரிய பேரரசாக வளர்ந்தது. அதேபோல பௌத்த மதம் மற்றும் சமண மதமும் பீகாரில்தான் பிறந்தது.
மகாஜனபதங்கள் எப்படி வளர்ந்தது? பௌத்த மதம் மற்றும் சமண மதமும் எப்படி தவிர்க்க முடியாததாக வளர்ந்தது என்பது குறித்து அடுத்தடுத்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications