பீகாரில் உருவாகும் இளம் தலைவன்.. நிரூபித்து காட்டிய ராம் விலாஸ் பாஸ்வானின் வாரிசு சிராக் பாஸ்வான்!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 2010ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை போல் பீகாரில் என்டிஏ கூட்டணி பெற்றுள்ள அபார வெற்றி, அக்கட்சி தொண்டர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்தத் தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்த ஜேடியூ - லோக் ஜனசக்தி கட்சிகள் இணைந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 2005 சட்டசபைத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வாலின் லோக் ஜனசக்தி கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற 22 எம்எல்ஏ-க்கள் நிதிஷ் குமார் பக்கம் தாவினர். இதனால் லோக் ஜனசக்தி மற்றும் ஜேடியூ இடையில் பகை ஏற்பட்டது.

என்னதான் பாஜக கூட்டணியில் இடம்பெற்றாலும், கடைசி வரை ராம் விலாஸ் பாஸ்வான் நிதிஷ் குமாருடன் நட்பு பாராட்டவில்லை. அதன்பின் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக சிராக் பாஸ்வான் வந்த போதும், ஜேடியூவுக்கு எதிராகவே அரசியல் செய்து வந்தார். இதனால் 2020 சட்டசபைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தனித்துப் போட்டியிட்டது.
பாஜக போட்டியிட்ட 110 தொகுதிகளை தவிர்த்து, ஜேடியூ வேட்பாளர்கள் போட்டியிட்ட 130 தொகுதிகளில் லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. அதில் ஒன்றில் மட்டுமே வென்றாலும், சுமார் 35 தொகுதிகளில் நிதிஷ் குமார் கட்சியின் வெற்றியை தடுத்தனர். பட்டியலின வாக்குகளை பிரிப்பதால், பீகாரில் வெற்றி அடைய சிராக் பாஸ்வானின் தேவை பாஜகவுக்கு அத்தியாவசியமாகியது.
இதனை நாடாளுமன்றத் தேர்தலின் போதே பாஜக சரி செய்யத் தொடங்கியது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் களத்தில் லோக் ஜனசக்தி வாக்குகள் ஜேடியூவுக்கு செல்லுமா? ஜேடியூ வாக்குகள் சிராக் பாஸ்வான் கட்சிக்கு செல்லுமா என்ற கேள்விகள் எழுந்தன.
அதற்கேற்ப சிராக் பாஸ்வான் ஜேடியூ நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆனால் களத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர். லோக் ஜனசக்தி கட்சி சார்பாக போட்டியிட்டுள்ள 29 வேட்பாளர்களில் 21 பேர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றனர்.
இதனால் ராம் விலாஸ் பாஸ்வானின் வாரிசாக சிராக் பாஸ்வான் முத்திரைப் பதித்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் பீகார் அரசியலில் சிராக் பாஸ்வானிடம் பெரியளவில் ஈர்ப்பு இல்லை என்றும், மக்கள் ஈர்க்கும் வகையில் கரீஷ்மா இல்லை என்றும் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இந்த தேர்தல் வெற்றியின் மூலமாக அத்தனை விமர்சனங்களையும் சிராக் பாஸ்வான் நொறுக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications