பீகார் சட்டசபையில் நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! பாஜக வெளிநடப்பு!
பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. முன்னதாக பீகார் சட்டசபையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆதரவுடன் ஜேடியூ புதிய ஆட்சியை அமைத்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டதால் ஆர்ஜஏடி-காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பொறுப்பேற்றார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். நிதிஷ்குமாரின் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது.

சட்டசபை பலம்
இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 243 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது மொத்தம் 241 இடங்கள். 2 இடங்கள் காலியாக உள்ளன. தற்போதைய நிலையில் நிதிஷ்குமார் அரசுக்கு மொத்தம் 165 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.

சபாநாயகரால் குழப்பம்
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னதாக சபாநாயகராக இருந்த பாஜகவின் விஜயகுமார் சின்ஹாவால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. விஜய்குமார் சின்ஹா மீது நம்பிக்கை இல்லை என ஜேடியூ-ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தனர். பொதுவாக இத்தகைய நம்பிக்கை இல்லா தீர்மானங்கள், ஆட்சி மாறுதல்களின் போது சபாநாயகர் ராஜினாமா செய்வது வழக்கம். ஆனால் பாஜகவின் விஜய்குமார் சின்ஹா பதவியை ராஜினாமா செய்ய மறுத்து, நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் நிராகரித்திருந்தார்.

சபாநாயகர் ராஜினாமா
இது தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய விஜய்குமார் சின்ஹா, ஆகஸ்ட் 9-ந் தேதியன்று கொடுக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் முறையாக இல்லை; ஆகஸ்ட் 10-ந் தேதிதான் முறையான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தனர்; ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள 14 நாட்கள் அவகாசம் தேவை என கூறினார். பின்னர் ஒருவழியாக சபாநாயகர் பதவியில் இருந்து விஜய்குமார் சின்ஹா ராஜினாமா செய்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
இதையடுத்து துணை சபாநாயகர், மகேஸ்வர் ஹசாரி பொறுப்பு சபாநாயகரானார். சபாநாயகர் ராஜினாமா செய்த நிலையில் சபை நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பகல் 2 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. சுமார் 3 மணிநேரம் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications