ஜார்க்கண்ட், டெல்லியை தொடர்ந்து.. பீகாரிலும் முக்கிய அஜெண்டாவை கையில் எடுக்கும் பாஜக!
பாட்னா: இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக முக்கிய குற்றச்சாட்டை முன்னெடுத்திருக்கிறது. ஏற்கெனவே டெல்லி, ஜார்க்கண்ட்டில் இது பாஜகவுக்கு கை கொடுத்திருந்தது. அந்த வகையில், பீகாரிலும் இது கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இதனையடுத்து 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதனையடுத்துதான் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை காங்கிரஸ் கையில் எடுத்திருந்தது.

பிரதமரின் அட்டாக்
இந்நிலையில், 'சட்டவிரோத குடியேற்றத்தை' காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊக்குவிக்கிறது என்கிற விமர்சனத்தை பாஜக கையில் எடுத்திருக்கிறது. "வாக்கு வங்கி அரசியல் காரணமாக, காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் அவற்றின் ஒட்டுமொத்த சூழலியல் அமைப்பும் வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளன. அவர்கள் இவ்வளவு வெட்கக்கேடானவர்கள், ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி யாத்திரைகளை மேற்கொள்கின்றனர்.
நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற வேண்டும். ஊடுருவலைத் தடுப்பது என்டிஏ-வின் பொறுப்பு. இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி மேலோங்கும். இது மோடியின் உத்தரவாதம். நாடு நேர்மறையான முடிவுகளைக் காணும்" என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய பொதுக்கூட்டத்தில் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகளை கடுமையாகத் தாக்கி பேசியிருந்தார்.
பாஜக அஜெண்டா?
பிரதமரின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதிர்க்கட்சிகளை தாக்கியிருந்தார். ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் "வாக்கு அதிகார் யாத்ரா" உண்மையில் ஊடுருவல்காரர்களின் வாக்களிக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடைபெற்ற 14 நாள் வாக்காளர் அதிகார் யாத்திரையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து திரண்டன. இந்த பின்னணியில்தான் பாஜகவின் குற்றச்சாட்டு முன்வந்திருக்கிறது.
சட்டவிரோத ஊடுருவல் குறித்து பாஜக தலைவர்கள் பேசுவது இது முதல் முறை அல்ல. அசாம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், சட்டவிரோத ஊடுருவல் ஏற்கனவே ஒரு முக்கிய தேர்தல் பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கிறது. டெல்லி மற்றும் ஜார்கண்டில், சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராக பாஜக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, சட்டவிரோத ரோஹிங்கியா மற்றும் வங்கதேச குடியேற்றவாசிகளின் பிரச்சனையை பாஜக கிளப்பியிருந்தது. தெற்கு டெல்லியின் ஓக்லாவில் வங்கதேச மற்றும் ரோஹிங்கியாக்களை ஆம் ஆத்மி அரசு குடியேற்றியதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
டெல்லியில் மோதல்
"வங்கதேச, ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களை ஓக்லாவில் குடியேற்றி ஆம் ஆத்மி 'பாவம்' செய்துவிட்டது" என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். தேர்தலுக்கு முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் டெல்லியில் பதிவு செய்யப்பட்ட 'சட்டவிரோத வாக்காளர்கள்' தொடர்பாக பரஸ்பரம் குற்றம்சாட்டியிருந்தனர்.
வங்கதேச மற்றும் ரோஹிங்கியா "ஊடுருவல்காரர்களுக்கு" டெல்லியில் வாக்களிக்கும் உரிமையை ஆம் ஆத்மி வழங்கியதாகவும், போலி ஆவணங்கள் மூலம் போலி வாக்காளர்களைச் சேர்த்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியது. இதற்கிடையில், பாஜக-வின் குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி எதிர்த்தது. வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்களை "வேண்டுமென்றே" மற்றும் "சட்டவிரோதமாக" நீக்கியதாக அது குறிப்பிட்டது.
"வங்கதேச மற்றும் ரோஹிங்கியாக்களின் ஊடுருவல்காரர்களை இந்தியாவில் வாக்காளர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. அத்தகையவர்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டோம், அவர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்குவோம். இந்த நபர்கள் போலி ஆவணங்களைப் பெற உதவியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதில் ஆம் ஆத்மிக்கு என்ன பிரச்சனை?" என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், புர்வாஞ்சலிகளை ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் மக்களுடன் ஒப்பிடுவதாக பாஜக-வை குற்றம் சாட்டினார்.
இருப்பினும் பாஜகவின் இந்த குற்றச்சாட்டு தேர்தல் அரசியலில் சிறப்பாக எதிரொலித்தது. டெல்லியில் 70 இடங்களில் 48 இடங்களை வென்று பாஜக ஆம் ஆத்மி அரசை வீழ்த்தியதற்கு இந்த யுக்தி பெரிய அளவில் கை கொடுத்தது.
அதேபோல ஜார்கண்டில், பிரதமர் மோடி, அமித் ஷா, மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பாஜக தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தனர். ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் அரசு, ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கான தர்மசாலாவாக மாநிலத்தை மாற்றுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். "ஜார்கண்டில் சாமாதான அரசியல் உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளிப்பதில் மும்முரமாக உள்ளது. இது தொடர்ந்தால், ஜார்கண்டில் பழங்குடி மக்கள் தொகை சுருங்கும். இது பழங்குடி சமூகத்திற்கும் நாட்டிற்கும் அச்சுறுத்தல். இந்த கூட்டணி நாட்டின் மக்கள் தொகையை மாற்ற சதி செய்கிறது" என்று பிரதமர் விமர்சித்திருந்தார்.
பாஜகவுக்கு சீமாஞ்சல் ஏன் முக்கியம்?
பீகார் மாநிலம் மேற்கு வங்காளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அப்படி மேற்கு வங்க எல்லையில் உள்ள மாவட்டங்கள்தான் சீமாஞ்சல் பகுதி என்று அழைக்கப்படுகிறது. பீகாரில் 17.7% அளவுக்கு இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அதில் 47% இஸ்லாமியர்கள் இந்த சீமாஞ்சல் பகுதியில்தான் இருக்கிறார்கள். எனவே இந்த பகுதியை குறிவைத்து பாஜக பிரச்சனையை எழுப்புகிறது. சீமாஞ்சலில் 24 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பூர்னியா, அராபியா, கிஷன்கஞ்ச் மற்றும் கட்டிஹார் ஆகிய 4 மாவட்டங்களை இந்த பகுதி உள்ளடக்கியுள்ளது. ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பாரம்பரியமாக முஸ்லிம் மற்றும் யாதவ் வாக்காளர்களிடையே இங்கு வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில், அசாசுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் எதிர்பாராத விதமாக நுழைந்து ஐந்து இடங்களை வென்றது. இது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்தது மற்றும் மறைமுகமாக பாஜகவுக்கு லாபத்தை அளித்தது, இது பிராந்தியத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications