பீகார்: நேற்று, இன்று, நாளை.. இந்தியாவுக்காக குப்தர்கள் விட்டு சென்ற பொக்கிஷம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இம்மாநிலத்தின் வரலாற்றை ஒன் இந்தியா தமிழ் தொகுத்து வழங்கி வருகிறது. தொகுப்பில், இதற்கு முன்னர் குப்தர் காலத்தின் பின்னடைவுகளை பார்த்தோம். இன்றைய தொகுப்பில் குப்தர்கள் விட்டு சென்ற பொக்கிஷம் குறித்து பார்ப்போம்.
ஆரியபட்டர், வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள். காளிதாசர் மற்றும் வராகமிகிரர் இவர்கள் இருவரும் குப்தப் பேரரசின் புகழ் பெற்ற மன்னரான இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் இருந்த நவரத்தினங்கள் எனப்படும் ஒன்பது அறிஞர்கள் குழுவில் அங்கம் வகித்தார்கள்.

காளிதாசர்
காளிதாசர் ஒரு சிறந்த சமஸ்கிருதக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர். இவருடைய படைப்புகளில், சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம் மற்றும் குமாரசம்பவம் ஆகியவை இன்றும் போற்றப்படுகின்றன. தனது படைப்புகளில் இவர் உவமைகள் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இந்த காலத்தில் நாம் அதை வாசிக்கும்போது சிம்பிளாக தோன்றினாலும், அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி எழுதுவது பெரிய விஷயம். எனவேதான் காளிதாசர், உவமைகளின் அரசராக பார்க்கப்படுகிறார்.
இவரது படைப்புகளில், மேகதூதம் மற்றும் சாகுந்தலம் ஆகியவை இயற்கையை மிகவும் துல்லியமான விவரித்திருக்கிறது. அதேபோல,அக்கால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு மற்றும் சுற்றுப்புறச் சூழலை இவரது படைப்புகள் பிரதிபலிப்பதால் இதை ஒரு வரலாற்று சான்றாகவும் வரலாற்றாசிரியர்கள் பார்க்கிறார்கள்.
வராகமிகிரர்
அதேபோல வராகமிகிரர் என்பவர் வானியலாளர், கணிதவியலாளர் மற்றும் ஜோதிடர் ஆவார். இவரும் காளிதாசர் காலத்தில்தான் வாழ்ந்திருக்கிறார். இவர் எழுதிய பிருகத் சம்ஹிதை எனும் நூல், வானியல், வானிலை, நிலநடுக்கம், கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் பிற இயற்கை நிகழ்வுகள் பற்றிய களஞ்சியமாக இன்றும் விளங்குகிறது. அதேபோல 'பஞ்ச சித்தாந்திகா' எனும் மற்றொரு நூல், கிரேக்க, ரோமானிய மற்றும் எகிப்திய வானியல் கோட்பாடுகள் உட்பட ஐந்து முக்கிய வானியல் கோட்பாடுகளைப் பற்றி விளக்குகிறது. இது தவிர 'பிருகத் ஜாதகம்' எனும் நூல் ஜோதிடம் தொடர்பான ஒரு முக்கியமான நூலாகும்.
ஆரியபட்டர்
இவர்களை போலவே மிகவும் புகழ்பெற்ற வானியல் அறிஞரான ஆரியபட்டர், குப்தர்கள் காலத்தில்தான் வாழ்ந்தார். புத்தகுப்தர் காலத்தில் இவர் வாழ்ந்தார். பூஜ்யத்தின் பயன்பாடு, வட்டத்தின் சுற்றளவைக் கண்டறியும் பை (π) மதிப்பு, மற்றும் இயற்கணிதம் ஆகியவற்றில் இவரது பங்களிப்பு முக்கியமானது. பூமி தனது அச்சில் சுழல்வதையும், சூரியனைச் சுற்றி வருவதையும் இவர் கண்டறிந்தார். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களுக்கான காரணங்களையும் இவர் விளக்கினார்.
அந்த காலத்தில் பூமியைத்தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது என்று ஆரியபட்டர் கூறியபோது அதை பலரும் எதிர்த்தனர். இவருக்கு பின்னர் வந்த சந்திரகுப்தர் எனும் ஆய்வளர் ஆரியபட்டரின் சூற்றை கடுமையாக தாக்கி எழுதியிருந்தார். ஆனால் இறுதியாக ஆரியபட்டர் சொன்னதுதான் உண்மை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நாளந்தா பல்கலைக்கழகம்
அதேபோல குப்தர்கள் காலத்தில்தான் நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தரால் நிறுவப்பட்டது. இது 12 ஆம் நூற்றாண்டு வரை, சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டது. நாளந்தா என்றால் அறிவை அளப்பவன் என்று பொருள். இது பௌத்த பல்கலைக்கழகமாக இருந்திருக்கிறது. குப்த மன்னர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பௌத்தம் பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கியது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இது குப்த மன்னர்கள் மற்ற மதங்களை எப்படி அரவணைத்து சென்றார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.
உலகின் முதல் உறைவிட பல்கலைக்கழகம் இதுதான். இந்த பல்கலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூட மாணவர்கள் தங்கி பயின்றிருக்கின்றனர். சீனாவை சேர்ந்த 'ஹியூன் சாங்' என்பவர் இந்த வெளிநாட்டு மாணவர்களில் ஒருவர். இவர் 5 ஆண்டுகள் இங்கு தங்கி கல்வி பயின்றிருக்கிறார்.
குப்தர்களின் பொக்கிஷம்
தான் கல்வி பயின்றது குறித்து தனது குறிப்புகளில், "நாளந்தா உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று. இங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவாற்றல் மிக உயர்ந்த நிலையில் இருந்தது. கற்பிக்கும் முறைகள் மிகவும் செம்மையானவையாக இருந்தன. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் வெளிப்படையாக விவாதிப்பார்கள்.
பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள், குளங்கள், தோட்டங்கள் மற்றும் அமைதியான சூழல் ஆகியவை கல்வி கற்பதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. நாளந்தா பல்கலைக்கழகம் பௌத்த தத்துவத்தின் மையமாக இருந்தது. மகாயான பௌத்தம் இங்கு மிக ஆழமாகக் கற்பிக்கப்பட்டது" என்று கூறியுள்ளார். இது தவிர துறவிகள் மற்றும் மாணவர்களுக்கான ஒழுக்க விதிகள், அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உணவு முறைகள் பற்றியும் அவர் விரிவாக எழுதியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் படைப்புகளும், நாளந்தா பல்கலைக்கழகமும் குப்தர்கள் விட்டு சென்ற பொக்கிஷமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications