Exploring Bihar: பீகார்: நேற்று, இன்று, நாளை.. கடவுளற்ற மதமாய் தோன்றிய பௌத்தம்! ஆசை துன்பத்திற்கு காரணமா?
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் பீகாரில் சமண/ஜைன மதம் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை பற்றி பேசியிருந்தோம். இன்று பௌத்த மதத்தின் தொடக்கம், வளர்ச்சி பற்றியும் பார்ப்போம்.
பீகாரில் சமண மதத்திற்கு பின்னர்தான் பௌத்தம் தோன்றியது. ஆனால் இவை இரண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது பிராமண மதம்தான். கடுமையான சாதிய அமைப்புகள், மற்றும் வேத முறை, உபநிடதங்கள், உயிர் பலி, பூஜைகள் ஆகியவை சாமானிய மக்களுக்கு அந்நியமாக இருந்தது. குறிப்பாக சாதிய அமைப்பு முறைக்கு வலுவான எதிர்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. இந்த எதிர்ப்பை பூர்த்தி செய்யத்தான் சமணம் உருவானது. ஆனால் அதிலும் சில சிக்கல்கள் இருந்தன.

கடவுளற்ற மதம்
கடுமையான துறவறம், நிர்வாணம், குடும்பத்தை விட்டு விலகி இருப்பது ஆகியவை செட் ஆகாத விஷயங்களாக இருந்தது. இதையெல்லாம் சரி செய்துதான் பௌத்தம் பிறந்தது. இந்த மதத்தை உருவாக்கிய புத்தர், சாக்கிய வம்சத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பீகாரில்தான். புத்தகயாவில் ஞானம் பெற்ற இவர் பௌத்த மதத்தை உருவாக்கினார்.
உலகின் கடவுளற்ற மதமாக தோன்றிய புத்த மத்தின் மிகப்பெரிய பின்னடைவு என்னவெனில், புத்தர் தன்னுடைய எந்த போதனைகளையும் எழுத்தாக விட்டுச் செல்லவில்லை என்பதுதான்.
புத்த போதனைகள்
அசோக மன்னனின் மகன் மகிந்தா, இலங்கையில் புத்த மதத்தை அறிமுகப்படுத்தினான். கி.மு முதலாம் நூற்றாண்டில் சிங்கள மன்னன் ஒருவனால் புத்தரின் போதனைகள் பாலி மொழியில் எழுத்து வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதுவரை புத்த போதனைகள் வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்தன. தற்போது இந்த பாலி மொழி எழுத்துக்கள்தான் புத்தரின் போதனைகளை தெரிந்துக்கொள்ள நமக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதாரம்.
புத்தரின் கோணம்
புத்தருக்கு முன்னர் வந்த அனைத்து மதங்களும் மக்களின் பிரச்சனைகளை வேறு கோணத்தில் அணுகின. ஆனால் புத்தர் அணுகிய கோணம், பௌத்த மதத்தை இன்றைக்கும் வேறு மதங்களிலிருந்து வேறுபடுத்தி வைத்திருக்கிறது.
இவர் ஆசைகளே துன்பத்திற்கு காரணம் என்றார். ஏன் இப்படி சொன்னார்? 80 ஆண்டுகள் வாழ்ந்த அவர் பல போர்களை பார்த்தார். குறிப்பாக கோசல மன்னன் விதூதபன், சாக்கியர்களை கொடூரமாக கொன்று தனது ஆட்சிப்பரப்பை விரிவாக்கினான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து நிலப்பரப்பை விவரிவாக்குவதை போல இது இருந்தது. மற்ற அரசர்களும் அதையே செய்தனர். போர்கள், நிலப்பரப்பை பிடிப்பது, வரி, சாமானிய மக்களை ஒடுக்குவது, பாலியல் சுரண்டல், திருட்டு, கொலை, கொள்ளை, ஊதாரித்தனம் இவையெல்லாம் இந்த காலத்தில் அதிகரித்திருந்தன.
ஆசையே துன்பத்திற்கு காரணம்
இதற்கான காரணங்களை புத்தர் ஆய்வு செய்தார். இறுதியாக துன்பங்களுக்கு ஆசையே காரணம் என்கிற முடிவுக்கு வந்தார். இன்று ஒரு நிலப்பரப்பை கைப்பற்றிய அரசன், அத்துடன் நின்றுவிடப்போவதில்லை. கடலுக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பையும் கைப்பற்ற முயல்வான். செல்வத்தை இரண்டு மடங்காக ஆக்கியவன், நாளை அதை மூன்று மடங்காக ஆக்குவான். இறுதியில் அவனின் சொந்த ரத்தங்கயே அவனின் செல்வத்தை அபகரிக்கவும் செய்யும் என்று கூறினார்.
தீர்வு என்ன?
அவர் சொன்னது போலவே நடக்கவும் செய்தது. புத்தர் காலத்தில் பீகாரில் மகத மன்னனாக இருந்த பிம்பசாரனை அவனது மகன் அஜாதசத்ரு பட்டினி போட்டு கொன்றான். இத்தனைக்கும் பிம்பசாரன் பௌத்த ஆதரவாளன். அவனது மகன் அஜாதசத்ருவும் பௌத்த ஆதரவாளன்.
சொத்து, சுகம் இதெல்லாம் நிரந்தரமில்லை என்பதை புத்தர் அறிந்திருந்தார். மனித குலம் வளர்ச்சியடைந்த காலம் அது. உற்பத்தி முறை அதிகரித்து உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில், உற்பத்தியை ஒரு சிலர் கையில் வைத்துக்கொண்டு அதை தனித சொத்தாக வளர்த்தனர். அதை காக்கவும், அதிகரிக்கவும் போர்கள் நடந்தன.
தனி சொத்து
இதனால் ஏற்படும் துன்பங்கள், பிராமண மதம் சொல்வதை போல பூஜைகள் செய்தால் தீராது. சமண மதம் சொல்வதை போல கடும் துறவறம் இருந்தாலும் சரியாகாது. இதற்கு ஒரே வழி தனி சொத்தை கைவிடுதல்தான். இதற்கு புத்த யோசித்தது, பழங்குடியினர் வாழ்வியல் முறையைதான். இப்படித்தான் புத்த மடாலயங்கள் தோன்றின. மடாலயங்களில் எல்லாம், எல்லோருக்கும் பொது. இங்கு தனி சொத்து கிடையாது. எல்லோரும் இப்படி வாழ்ந்தால் பிரச்சனை இருக்காது என்று புத்தர் நம்பினார்.
ஆசைகளால் ஏற்படும் துன்பகளுக்கு தீர்வை யோசிக்காமல், அதை சகித்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது புத்தரின் மிக முக்கியமான போதனையாக இருந்தது.
இப்படி ஒரு சிறப்பான சிந்தனையை புத்தர் உலகிற்கு கொடுத்தார். இது யதார்த்தத்தில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான். ஆனால் அந்த காலத்தில் இப்படி யோசித்ததே புரட்சிகரமான சிந்தனைதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் பீகார் இன்றைக்கும் பெருமைமிக்கதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications