லோக்சபா தேர்தல்: பாஜகவை விட ஸ்பீடு! பீகார் “இந்தியா” அணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரம்!
பாட்னா: லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் பீகார் மாநிலத்தில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
"இந்தியா" கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையி நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடுகளை வெகு சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பதை பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளை எப்படி பங்கீடு செய்வது என்பது தொடர்பாக "இந்தியா" கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருக்கின்றன. பீகாரில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
2019 தேர்தல் நிலவரம்: 2019 லோக்சபா தேர்தலின் போது பாஜக-ஜேடியூ-எல்ஜிபி கட்சிகள் ஓரணியில் இருந்தன. பாஜக, ஜேடியூ தலா 17 தொகுதிகளிலும் எல்ஜிபி 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் பாஜக 17; ஜேடியூ 16; எல்ஜிபி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றன. அத்தேர்தலில் காங்கிரஸ், ஆர்ஜேடி, ஆர்.எல்.எஸ்.பி, ஹெச்.ஏ.எம், வி.ஐ.பி கட்சிகள் ஓரணியில் நின்றன. ஆர்ஜேடி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 1-ல் வென்றது. இன்னொரு பக்கம் இடதுசாரிகள் தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்திலும் அந்த அணி வெல்லவில்லை.

இந்தியா அணி தொகுதி பங்கீடு: இம்முறை பீகாரில் ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ், ஆர்.எஸ்.பி, இடதுசாரிகளில் சிபிஐ(எம்.எல்), சிபிஐ, சிபிஎம், எஸ்யூசிஐ, பார்வார்டு பிளாக் அனைத்தும் "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதனால் ஆர்ஜேடி, ஜேடியூ இரு கட்சிகளும் தலா 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் 4, இடதுசாரிகளுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யலாம் என பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளை கேட்கிறது; சிபிஐ( எம்.எல்.) கட்சி கணிசமான செல்வாக்கை பெற்றிருப்பதால் 2 தொகுதிகளைக் கோருகிறது. சிபிஐ கட்சியும் ஒரு தொகுதியை கேட்கிறது. இதனடிப்படையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு தொகுதிகளுக்கு மட்டும்தான் பேச்சுவார்த்தை என்பதால் விரைவில் பீகார் "இந்தியா" அணி தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்து அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றன ஊடக செய்திகள்.












Click it and Unblock the Notifications