மனசு வலிக்குது.. என் அம்மாவை தவறாக பேசுகிறார்கள்.. பீகார் மக்கள் முன் கலங்கிய மோடி.. கடும் அட்டாக்
பாட்னா: ‛‛தாய் தான் நம் உலகம். கடந்த சில நாட்களாக என்ன நடக்கிறது? என்பதை நான் பார்க்கிறேன். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கிய என் தாயை ஒவ்வொரு மேடைகளிலும் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தவறாக பேசி வருகின்றனர். இதனால் என் மனதில் வலி ஏற்பட்டுள்ளது'' என்று பிரதமர்மோடி பீகார் மக்கள் முன் கண்கலங்கி பேசினார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் பீகார் மக்கள் மத்தியில் காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் தனது அம்மாவை காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) கட்சியினர் தவறாக பேசுவதாக கூறி கலங்கினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:
இதயம் வலிக்கிறது
‛‛அம்மா தான் நம் உலகம். அம்மா தான் நம் சுயமரியாதை. கலாசாரமிக்க பீகாரில் கடந்த சில நாட்களாக என்ன நடக்கிறது என்பதை நான் கனவிலும் நினைத்து கூட பார்த்தது இல்லை. பீகாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி மேடைகளில் என் அம்மாவை தவறாக பேசுகின்றனர். என் இதயத்தில் எவ்வளவு வலி உள்ளது என்பது எனக்கு தெரியும். அதேபோன்ற வலி பீகார் மக்களுக்கும் இருக்கிறது.
இந்த தவறான கருத்துகள் என் தாயை மட்டும் அவமானப்படுத்துவதாக இல்லை. இந்த அவமானம் நாட்டில் உள்ள அனைத்து அம்மா, சகோதரிகள் மற்றும் மகள்களுக்கானாகதாக இருக்கிறது. இந்த அவதூறை கேட்ட பிறகு நீங்கள் அனைவரும் எவ்வளவு மோசமாக உணர்ந்தீர்கள் என்பது எனக்கு தெரியும்.
கவலையாக இருக்கிறது
என் அம்மா அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். நான் உங்களை போல் பல கோடி பேருக்கு சேவைகள் செய்து வந்தேன். இப்போது என் அம்மா இறந்துவிட்டார்.
காங்கிரஸ் கைவிட வேண்டும்
இப்படி இருக்கும்போது அவரை ஏன் காங்கிரஸ் - ஆர்ஜேடி கட்சியினர் தவறாக பேசுகின்றனர்? நான் இப்போது உங்களில் பல பேரின் கண்களில் கண்ணீரை பார்க்கிறேன். இது ரொம்ப கவலையளிக்கிறது. காங்கிரஸ் ஜனாதிபதி திரெளபதி முர்முவையும் அவமரியாதை செய்துள்ளது. அவர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர். பழங்குடியின குடும்பத்தை சேர்ந்தவர். பெண்கள் மீதான வெறுப்பு அரசியலை காங்கிரஸ் கைவிட வேண்டும்.
இத்தகைய மொழி நடையை பயன்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? இந்தியா என்பது அம்மாக்களை தவறாக பேசுவோரை ஒருபோதும் மன்னிக்காது. இதனால் அனைவரும் காங்கிரஸ் - ஆர்ஜேடி கட்சியிடம் இருந்து பதில் கேட்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆர்ஜேடி - காங்கிரஸ் கட்சியின் அட்ராசிட்டிகளை நாம் பொறுக்க கூடாது '' என கலங்கியபடி கூறினார்.
மோடியின் பேச்சுக்கு என்ன காரணம்?
பீகாரில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பேரணி சென்று வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த பேரணியின்போது காங்கிரஸ் கட்சியினர் சிலர் மோடியின் தாய் ஹீராபென் மோடியை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக - காங்கிரஸ் கட்சியினர் இடையே பிரச்சனை வெடித்தது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி காங்கிரஸ் - ஆர்ஜேடி கட்சியினரை விமர்சனம் செய்து பேசி உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications