ஓயாத 'சனாதனம்' சர்ச்சை! உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும்.. பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன்
பாட்னா: சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்" என பேசியிருந்தார்.
இதற்கு திமுக அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலிருந்தே மேலெழுந்தது. ஆனால் இது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரியதாக இல்லை. காங்கிரஸ் தலைவர்களும் இந்த விவகாரத்தை பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் பாஜக இந்த விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. அது 5 மாநிலத்திற்கான தேர்தல் காலகட்டம் என்பதால், இந்தியா கூட்டணி சனாதன எதிர்ப்பை ஆதரிக்கிறது என்று பாஜகவினர் தேர்தல் பிரசாரம் செய்தனர். வடமாநிலங்களில் இந்த பிரசாரம் பாஜகவுக்கு பெருமளவு கைகொடுத்தது.
இந்நிலையில் உதயநிதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் வாதிட்ட தமிழ்நாடு அரசு "விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் இத்தகைய மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. நாடு முழுவதும் 40க்கும் அதிகமான வழக்குகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு விளம்பர நோக்கத்துடனே இவர்கள் செய்கிறார்கள். மனு தாக்கல் செய்துவிட்டு பிறகு வெளியே வந்து ஊடகங்களிடம் பேட்டி அளிப்பதற்காக தான் இதை இவர்கள் கடைபிடிக்கிறார்கள். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டது.
அதேசமயம் மறுபுறம் அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்துகளின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கவுசலேந்திர நாராயணன் என்பவர் பாட்னாவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் பிப்.13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications