அரண்மனை அரசியல் மோதல்: அன்று கருணாநிதி- அழகிரி- ஸ்டாலின்.. இன்று லாலு பிரசாத்- தேஜஸ்வி- தேஜ்பிரதாப்
பாட்னா: மன்னராட்சி காலமானாலும் மக்களாட்சி காலமானாலும் அரண்மனை அரசியல் என்பது மட்டும் ஓய்ந்துவிடாத ஒன்றாகவே இருக்கிறது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்.ஜே.டி.) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ் இருவரும் இப்போது கட்சியில் யாருக்கு அதிகாரம் என்கிற மோதலில் குதித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அண்ணன் மு.க. அழகிரி இடையேயான அதிகார மோதல் தமிழகம் அறிந்தது. திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை அறிவித்து தோற்கடிக்கவே செய்தார் அழகிரி.
மு.க. அழகிரி மத்திய அமைச்சராக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலினை அப்போது துணை முதல்வராக்கினார் கருணாநிதி. ஒருகட்டத்தில் கருணாநிதியிடம் ஸ்டாலின் குறித்து கடுமையாக விவாதம் செய்தார் அழகிரி. இதனால் கடுப்பான கருணாநிதி, மகன் அழகிரியை கட்சியைவிட்டே நீக்கினார். கருணாநிதி காலத்திலும் சரி அவருக்குப் பின்னரும் இன்னமும் திமுகவின் கதவுகள் மு.க. அழகிரிக்கு திறக்கப்படவே இல்லை.

திமுகவும் மு.க. அழகிரியும்
மு.க. அழகிரியும் திமுகவுக்கு எதிராக எத்தனையோ நடவடிக்கைகளை திரைமறைவிலும் பகிரங்கமாகவும் செய்து பார்த்தார். தற்போதைய சட்டசபை தேர்தலில் திமுக வென்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கும் வரையில் அழகிரி கொடுத்த சாபங்கள் அத்தனை அத்தனை.. மு.க.ஸ்டாலின் முதல்வராகவே முடியாது; திமுக ஆட்சிக்கு வரவே முடியாது என அவ்வப்போது ஏர்போர்ட்டில் ஷாக் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியவர் மு.க. அழகிரி. ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கும் முடிவுக்கு கூட போயிருந்தார். இப்போதும் கூட அழகிரி பாஜக பக்கம் வருவார் என்கிற பேச்சுகளை பாஜக தலைவர்களே பேசி வருகின்றனர். ஆனாலும் அழகிரியின் எதிர்கால நடவடிக்கைகள் பூடகமாகவே உள்ளன.

பீகார் அரசியலில் பரபரப்பு
எதற்கு இப்போது அழகிரி- ஸ்டாலின் சண்டை என்கிறீர்களா? அழகிரியின் சாப குரலை இப்போது அப்படியே பீகாரில் சொல்லி வருகிறார் லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப். அதாவது லாலுவின் மற்றொரு மகனான தேஜஸ்வி யாதவை பீகார் முதல்வராக்குவேன் என சபதம் எடுத்தவர் தேஜ்பிரதாப். ஆனால் கட்சியில் யாருக்கு அதிகாரம் என்கிற கோதாவில், தேஜஸ்வியால் முதல்வராக முடியாது என மு.க.அழகிரியை போலவே பேசி வருகிறார் தேஜ்பிரதாப்.

தேஜஸ்வி- தேஜ்பிரதாப் மோதல் என்ன?
அப்படி என்ன இருவருக்கும் பிரச்சனை? ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மாநில மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர் ஆகாஷ் யாதவ். இவர் தேஜ்பிரதாப்பின் வலதுகரமாக அறியப்படுகிறவர். ஆகாஷ் யாதவின் கட்சி பதவியை பறித்துவிட்டார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங். இதுதான் தேஜ்பிரதாப்புக்கு கோபம். இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேஜ்பிரதாப் யாதவ், ஆர்.ஜே.டியை சொந்த கட்சியாக நினைத்து கொண்டு செயல்படுகிறார் ஜெகதானந்த் சிங். அவர் ஹிட்லரைப் போல செயல்படுகிறார். இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடம் புகார் செய்கிறேன் என கொந்தளித்தார். அத்துடன், மகாபார பாத்திரங்களை வைத்தும் தேஜ்பிரதாப் ஒப்பிட்டு பேசுவது வழக்கம். அதாவது தேஜஸ்வி யாதவ் ஒரு அர்ஜூனன். நான் கிருஷ்ணன். அர்ஜூனனை மாநிலத்தின் முதல்வர் பதவியில் அமர வைக்காமல் ஓயமாட்டேன் என முன்னர் கூறியிருந்தேன். எங்களது அர்ஜூனன்- கிருஷ்ணா கூட்டணியை ஜெகதானந்த் சிங், சஞ்சய் யாதவ்(தேஜஸ்வி ஆலோசகர்) பலவீனப்படுத்துகிறார். இத்தகைய துரியோதனன்கள் கூட இருந்தால் தேஜஸ்வி யாதவாம் மாநிலத்தின் முதல்வராக முடியுமா என்பது சந்தேகம் என சாபம் விட்டுள்ளார். அதாவது தேஜஸ்வி யாதவின் ஆலோசகரான சஞ்சய் யாதவ் ஒரு துரியோதனன்; ஜெகதானந்த் சிங் சிசுபாலர் எனவும் பகிரங்கமாக சாடியிருக்கிறார் தேஜ்பிரதாப்.

தேஜஸ்வி கோபம்
இந்த அதிகார மோதல் குறித்து கருத்து தெரிவித்த தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ் என்னுடைய அண்ணன்தான். என்னுடைய பெற்றோர்கள் மூத்தவர்களை எப்படி மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்துள்ளனர். கட்சியில் ஒழுங்கீனமாக யார் நடந்தாலும் நடவடிக்கை பாயத்தான் செய்யும். அதுதான் இப்போதும் நிகழ்ந்துள்ளது என்றார். மேலும் லாலு பிரசாத்துடன் ஆலோசனை நடத்த டெல்லி சென்றார் தேஜஸ்வி. தற்போது டெல்லியில் முகாமிட்டிருக்கும் தேஜஸ்வி, ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பிரதமர் மோடியை சந்திக்க உள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அனைத்து கட்சி குழுவுடனும் இணைந்து கொள்கிறார். ஆர்ஜேடியில் தேஜஸ்வி யாதவ் தான் தீவிரம் காட்டி வருகிறார். அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் அவரே முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் தேஜ்பிரதாப் தன்னை சிவன், கிருஷ்ணரின் பக்தர் என கூறி கொள்வதுடன் அவர்களைப் போல வேடமிட்டு ஆலய தரிசனங்களில் அதி தீவிரம் காட்டுகிறவர். ஆனாலும் தமக்கும் கட்சியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அவர் கோஷ்டி அரசியலை ஊக்குவித்தும் வருகிறார். இதுதான் ஆர்ஜேடியின் அரசியல் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கக் கூடியதாகவும் உருவெடுத்துள்ளது. மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான லாலு பிரசாத் தீவிர அரசியலில் ஈடுபடாமல் டெல்லியில் மகள்கள் வீட்டில் இருந்து வருகிறார். இப்போதாவது லாலு பிரசாத் களத்துக்கு வந்து அதிரடி காட்டுவாரா? என்பதுதான் ஆர்ஜேடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. மேலும் தேஜ்பிரதாப் போன்றவர்களை இப்போதே ஒடுக்கி வைத்தால்தான் நல்லது என்பதும் ராஷ்டிரிய ஜனதா தள தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்கின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள். இனி அத்தனையும் லாலு பிரசாத் கைகளில்தான் இருக்கிறது!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications