அய்யோ காப்பாத்துங்க! ஓடும் பேருந்தில் மீண்டும் ஒரு ‘நிர்பயா’..! பீகாரில் பீதிக்குள்ளாக்கிய சம்பவம்.!
பாட்னா : பீகாரில் ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சம்பரன் மாவட்டத்தின் பெட்டியாவில் தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
வட மாநிலங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாலியல் பலாத்கார சம்பவங்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது என்றே கூறலாம்.
உத்திர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் கூட நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் 'நிர்பயா' பாலியல் சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

அதிர்ச்சி சம்பவம்
கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி, 'நிர்பயா' நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். நண்பரும் தாக்கப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். இந்நிலையில் இதேபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியிருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் பலாத்காரம்
பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பாரானில் உள்ள பெட்டியா மகளிர் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், இளம்பெண் ஒருவர் மோதிஹாரியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பாட்னாவிலிருந்து பெட்டியா செல்லும் பேருந்தில் ஏறியதாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து ஆள் நடமாற்றமற்ற சாலையில் சென்ற போது பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சிலர் அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மயக்க மருந்து விபரீதம்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்பெண்ணுக்கு மயக்கமருந்துகள் கலந்த உணவை அளித்ததாகவும், அதைச் சாப்பிட்டபோது, அவர் மயக்கமடைந்ததாகவும், பின்னர் குற்றவாளிகளால் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெட்டியா பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் பலர் பேருந்தை பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

வழக்குப் பதிவு
பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவு திரும்பியதும், அவ்வழியாக சென்றவர்களை அழைப்பதற்காக பேருந்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் தட்டத் தொடங்கினார். அவர்களில் சிலர் அந்த இளம் பெண்ணை பார்த்து, வாகனத்தில் இருந்து அவரை இறக்கி, உள்ளூர் காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளனர். பின்னர் போலீசார் அங்கு வந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், இந்த வழக்கு பெட்டியா மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

குற்றவாளிகள் கைது
கூட்டு பலாத்காரம் தொடர்பான பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் மகளிர் காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications