பீகார் தேர்தல்: சகோதரர்களுக்கிடையே வலுக்கும் மோதல்! தேஜஸ்விக்கு கடும் வார்னிங் கொடுத்த தேஜ் பிரதாப்
பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், இந்தியா கூட்டணி சார்பில் முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கும் தேஜஸ்வி யாதவின் அண்ணனுமான, தேஜ் பிரதாப் யாதவ் மகுவா தொகுதியில் தனித்து போட்டியிடுகிறார். தன்னை எதிர்த்து தனது தம்பி இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தால், கதை வேறு மாதிரி ஆகிவிடும் என்று தேஜ் பிரதாப் எச்சரித்திருப்பது, அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக தேஜ் பிரதாப்பை, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் லாலு பிரசாத் நீக்கியிருந்தார். இதனையடுத்து 'ஜனசக்தி ஜனதா தளம்' என்று புதிய கட்சியை தேஜ் பிரதாப் உருவாக்கியிருந்தார்.

பீகாரில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே மகுவா தொகுதியில் தேஜ் பிரதாப் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வெற்றி பெற்று தன்னை அரசியல் களத்திலும், குடும்பத்திற்குள்ளும் ஒரு பெரிய கையாக நிலை நிறுத்திவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார். எனவே இரவு நேரங்களில் கூட மக்களை சந்தித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தேஜ் பிரதாப், "தேஜஸ்விக்கு தைரியம் இருந்தால், லாலு மற்றும் கட்சியின் நிழலில் இருந்து வெளியே வந்து தனித்து தேர்தல் களத்தில் நின்று காட்டட்டும். தேஜஸ்வி யாதவ் மகுவாவில் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வந்தால், நானும் ராகோபூர் தொகுதிக்கு செல்வேன். அங்கு அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்" என்று கூறியிருக்கிறார். சகோதரர்களுக்கு இடையே சண்டை எனில், சில பர்சனல் விஷயங்கள் எல்லாம் நடு தெருவுக்கு வந்துவிடும். எனவே, இந்த வார்னிங்கை தேஜஸ்வி யாதவ் கொஞ்சம் சீரியஸாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார். தேஜஸ்வி யாதவ் பீகாரின் ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிக்கப்பட்டது குறித்து தேஜ் பிரதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "தேஜஸ்வி முதல்வர் வேட்பாளரானால் எங்களுக்கு என்ன? நாங்கள் எங்கள் வேலையில் பிஸியாக இருக்கிறோம்" என்று பிரதாப் சிம்பிளாக முடித்துக்கொண்டார்.
மகுவா தொகுதியில் முக்கியமாக 4 வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜனசக்தி ஜனதா தளம் சார்பில் தேஜ் பிரதாப் யாதவ் களத்தில் உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சார்பில் சஞ்சய் குமார் சிங் மகுவாவில் போட்டியிடுகிறார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் முகேஷ் குமார் ரோஷனுக்கு இந்தத் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் முறையாக தேர்தல் களமிறங்கியுள்ள பிரசாந்த் கிஷோரின் ஜனசுராஜ் கட்சி, இந்தத் தொகுதியில் இந்திரஜித் பிரதானுக்கு சீட் வழங்கியுள்ளது. மகுவா தொகுதியில் நவம்பர் 6 அன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications