2 சிறுமிகள்.. மிட்டாய் கொடுத்து 6 மாதமாக பலாத்காரம்.. 10 வெறி பிடித்த இளைஞர்களுக்கு வலைவீச்சு!
Recommended Video
புதுச்சேரி: தாயை பிரிந்து பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்துவந்த இரண்டு சிறுமிகளை மிட்டாய் வாங்கி கொடுத்து 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி 7 வயது மற்றும் 9 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் அந்த பெண்ணை விட்டு அவரது கணவர் பிரிந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால் வேலைக்காக புதுச்சேரி வந்தபோது, புதுச்சேரியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, அவரை மணந்த அந்த பெண் மேலும் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிவிட்டார்.

இதைத்தொடர்ந்து முதல் கணவர் மூலம் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் திண்டிவனத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டில் விட்டு விட்டு, அந்த தொழிலாளியுடன் புதுச்சேரியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். பாட்டில் வீட்டில் வசித்துவந்த இரண்டு சிறுமிகளும் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு குழந்தைகளை பார்க்க அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்றார். அவரை பார்த்ததும் சிறுமிகள் இரண்டு பேரும் ஓடி வந்து கட்டி அணைத்து அழுதனர். அப்போது அந்த குழந்தைகள் சிலரால் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தாயிடம் தெரிவித்து அழுதுள்ளனர். இதனால் செய்வதறியாமல் குழந்தைகளை அந்த பெண் தன்னுடனே அழைத்துக் கொண்டு, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளியில் 9 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரது தங்கையும் சோர்வுடன் காணப்பட்டார். இதனால் அந்த சிறுமிகள் இருவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிறுமிகளை மருத்துவர்கள் பரிசோதித்ததில், இருவரும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி இருந்தது தெரியவந்தது. உடனே இது குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளிடம், விழுப்புரம் குழுந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கெஜலெட்சுமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சிறுமிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமிகள் தங்கள் பாட்டி வீட்டில் இருந்த போது 10 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்து கண்ணீர் விட்டனர்.

மேலும் சிறுமிகள் பாட்டி வீட்டில் உள்ள தெருவில் விளையாடிகொண்டிருக்கும்போது, அவர்களிடம் அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு காட்டுவதுபோல் அந்தரங்க இடங்களில் தொட்டும், மிட்டாய் வாங்கி கொடுத்தும் தங்களின் இச்சைக்கு பணிய வைத்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இந்த கொடுமை அரங்கேறி உள்ளது. ஒரு கட்டத்திற்குமேல் இக்கொடுமையை பொறுக்க முடியாத சிறுமிகள், தங்களை விட்டுவிடுங்கள் என கதறியுள்ளனர். அதையும் பொருட்படுத்தாமல் சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டு சிறுமிகளுக்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் 5 க்கும் மேற்பட்ட இளைஞர்களை திண்டிவனம் காவல்நிலைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை பிரிந்து பாட்டி வீட்டில் இருந்த சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications