எனக்கு எதிரா சதி பண்றாங்க... புதுச்சேரியில் ஓம்சக்தி சேகரையும் கதற வச்சிட்டாங்களே!
என்னை கட்சியை விட்டு அனுப்ப பார்க்கிறார்கள். எனக்காக உழைத்தவர்களை விட்டு செல்வது கஷ்டமாக உள்ளது என்று அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: கேட்ட தொகுதி கிடைக்காமல் வேறு தொகுதி ஒதுக்கியதால் பல வேட்பாளர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். தங்களுக்காக வாக்கு சேகரிக்க உழைத்த ஆதரவாளர்களிடம் உருக்கமாக பேசி கண்ணீர் விடும் காட்சிகளும் அரங்கேறி வருகின்றன. அதிமுகவின் ஓம்சக்தி சேகர் நெல்லித்தோப்பு கேட்க அவருக்கு கிடைத்ததோ உருளையன்பேட்டை. தொகுதியை மாற்றிக்கொடுத்து என்னை அரசியலை விட்டு ஒதுக்கப் பார்க்கிறார்கள் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி வருகிறார் ஓம்சக்தி சேகர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வது, தேர்தல் பிரச்சாரம் செய்வது என அரசியல் களம் படுபரபரப்பாகவே உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் ஆக்ரோசமான பிரச்சார காட்சிகளுக்கு நடுவே உருக்கமான கண்ணீர் காட்சிகளும் அரங்கேறி வருகின்றன.
நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு உருளையன்பேட்டை தொகுதி ஒதுக்கப்பட்டது. நெல்லித்தோப்பு பகுதி என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் உள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓம்சக்தி சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் 2021
ஆதரவாளர்களிடம் பேசிய ஓம்சக்தி சேகர், நெல்லித்தோப்பு தொகுதியில் 2 முறை வெற்றிபெற்றுள்ளேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது. நான் வெற்றிபெற கூடாது என்பதற்காகதான் தொகுதியை மாற்றி கொடுத்துள்ளனர்.தற்போது ஒதுக்கப்பட்டுள்ள உருளையன்பேட்டை தொகுதியிலும் வெற்றிபெறுவேன் என்று சொன்னார்.

ஓம்சக்தி சேகர் கதறல்
உண்மைக்கு கிடைத்த விலை இது. என்னை கட்சியை விட்டு அனுப்ப பார்க்கிறார்கள். எனக்காக உழைத்தவர்களை விட்டு செல்வது கஷ்டமாக உள்ளது என்று கூறிக்கொண்டே கதறி அழுதார். இதைக்கண்ட அவரது ஆதரவாளர்கள் ஓடோடி வந்து ஓம்சக்தி சேகருக்கு ஆறுதல் கூறினார்கள்.

சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6
தமிழகம் போலவே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ஆம் தேதியே சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.

கண்ணீர் விட்ட நமச்சிவாயம்
புதுச்சேரியில் வில்லியனூர் தொகுதியில் வென்று அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார் நமச்சிவாயம், பாஜக சார்பில் தற்போது மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார். அதை தனது ஆதரவாளர்களிடம் தெரிவிக்கும் போதே கண்ணீர் விட்டு அழுதார் நமச்சிவாயம். தொகுதிமாறி போட்டியிடும் ஓம்சக்தி சேகரும் கண்ணீர் விட்டு கதறி அழுது ஆதரவாளர்களிடையே உருக்கத்தை வரவழைத்துள்ளது.












Click it and Unblock the Notifications