பெற்ற தந்தைக்கு சோறு கூட போடாத 3 மகன்கள்! அதிரடியாகச் சிறையிலடைத்த நீதிபதி.. காரைக்காலில் பரபரப்பு!
புதுச்சேரி: "பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும் சட்டம் கைவிடாது!" என்பதை நிரூபிக்கும் வகையில் புதுச்சேரியில் காரைக்காலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது வயதான காலத்தில் தன்னை கவனிக்காமல் கைவிட்டதோடு, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஜீவனாம்சம் தராமல் ஏமாற்றிய மூன்று மகன்கள் குறித்து முதியவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில்.. மூவரையும் கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 84 வயதான முதியவர் முனுசாமி. இவரது மனைவி காலமான நிலையில், தனது மகன்களான வரதராஜன், திருமுருகன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் திருப்பட்டினம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அனைத்து மகன்களும் நல்ல நிலையில் இருந்தும், தங்களைப் பெற்றெடுத்து, ஆளாக்கிய வயதான தந்தை முனுசாமியை ஒரு சுமையாகக் கருதி, நடுத்தெருவில் கைவிட்டுள்ளனர்.

மாதம் ரூ.2000
பெற்ற பிள்ளைகளே இப்படித் தன்னை கண்டு கொள்ளாமல் இருந்ததால் முனுசாமி மனமுடைந்து போனார். வேறு வழியின்றிக் கடந்த 2018ம் ஆண்டு காரைக்கால் நீதிமன்றத்தில் தனக்குப் பராமரிப்புச் செலவு வழங்கக் கோரி தன் 3 மகன்களுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "மகன்கள் மூவரும் தங்களது தந்தையின் வாழ்வாதாரத்திற்காக மாதந்தோறும் தலா ரூ.2,000 வழங்க வேண்டும்.. தவறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்" என்று உத்தரவிட்டார்.
6 ஆண்டுகள்
நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்த பிறகும், அந்த மூன்று மகன்களுக்கும் பெற்ற தந்தைக்குப் பணம் கொடுக்க மனமில்லை. மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்துள்ளனர். இதில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனுவை நிராகரித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் எந்தவொரு உத்தரவும் இல்லை. இருப்பினும், நீதிமன்றத்தின் சட்டப்படியான உத்தரவைச் சற்றும் மதிக்காமல், முனுசாமிக்கு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஒரு பைசா கூட தராமல் ஆதரவின்றி அலைக்கழித்து, ஏமாற்றி வந்துள்ளனர். மகன்களின் இந்தத் தொடர் ஏமாற்று வேலை குறித்து முனுசாமி மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
நீதிபதி அதிருப்தி
இந்த நிலுவைத் தொகை தொடர்பான வழக்கு காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தன் முன்னால் நின்ற முதியவர் முனுசாமியின் நலிவடைந்த நிலையைப் பார்த்த நீதிபதி கோபமடைந்தார். நல்ல நிலையில் இருந்தும் பெற்ற தந்தையை 71 மாதங்களாகப் பராமரிக்க மறுத்த வரதராஜன், திருமுருகன், மீனாட்சி சுந்தரம் ஆகிய மூவரின் மனிதாபிமானமற்றச் செயலைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தார்.
கைது செய்ய உத்தரவு
நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் தந்தையைத் தவிக்க விட்ட மகன்களுக்குப் பாடம் புகட்டும் விதமாக நீதிமன்றம், முனுசாமியின் மூன்று மகன்களையும் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்குமாறு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், "71 மாதங்களுக்கான நிலுவையில் உள்ள அந்தப் பராமரிப்பு உதவித்தொகையை முழுமையாக வழங்கத் தவறினால், இந்தச் சிறைத் தண்டனை மேலும் நீட்டிக்கப்படும்" என்றும் நீதிமன்றம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, போலீசார் அந்த மூன்று மகன்களையும் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வயதான காலத்தில் பெற்றோரைச் சுமையாகக் கருதிக் கைவிடும் தற்காலப் பிள்ளைகளுக்கு, காரைக்கால் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு ஒரு மிகச்சிறந்த சம்மட்டி அடியாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை!












Click it and Unblock the Notifications