ஜிப்மரில் பாராசிட்டமால் கூட இல்லாதது தப்புதான்.. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதில்!
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு பாராசிட்டமால் மாத்திரை கூட இல்லை இருந்தது தவறு தான் என்றும், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். இந்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது.
குறிப்பாக நீரழிவு, இதய நோய், சிறுநீரக பிரச்சனை, நரம்பு பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த மருந்து, மாத்திரைகளை, தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை நிர்வாகம் நிறுத்தியது. இதனால், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை
இதனையடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில், கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க வேண்டும் என்றும், இருப்பில் இல்லாத மருந்துகளை வெளியில் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளுமாறு குறிப்பிட்டு, ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு
இதனைத்தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் நிலவும் மருந்து, மாத்திரை தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன்பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர் சாய் சரவணன், சுகாதாரத்துறை செயலர். மருத்துவமனை இயக்குநர், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார்கள் வந்ததை அடுத்த ஆலோசனை நடத்தினோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. புற நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மருந்து இல்லை என சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

மருந்து தட்டுப்பாடு உண்மைதான்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முழுமையாக மருந்துகள் இலவசமாக வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்தை அவசரகால கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறப்பட்டாலும், அத்தகைய சூழ்நிலையை உருவாவதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்தது தவறு என்று தெரிவித்தார்.

பாராசிட்டமால் கேள்வியால் ஆவேசம்
தொடர்ந்து மிகவும் அத்தியாவசிய மற்றும் அவசர கால தேவையான 'பாராசிட்டமால் கூட இல்லை' என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமாக மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து உங்கள் முன்னிலையிலேயே மருத்துவமனை இயக்குநரிடம் விசாரிக்கிறேன் என்று விசாரித்தபோது, உண்மை நிலவரம் தெரிந்தது.

பாராசிட்டமால் கூட இல்லாதது தப்புதான்
இதன்பின்னர், நீங்கள் சொல்வது சரிதான். ஜிப்மர் மருத்துவமனையில் பாராசிட்டமால் கூட இல்லாமல் இருந்தது தவறு தான். ஆனால் இப்போது அவசர கால பயன்பாடு என்று கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது. கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications