புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு சிக்கல்.. சிபிஐ விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு எதிரான லஞ்ச புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க, தேர்ந்தெடுக்கபட்ட பல்கலைக்கழகங்களில், மனித வள மேம்பாட்டு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதேபோல, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக போலி ரசீதுகள் தயாரித்து 2 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக மைய இயக்குனர் பேராசிரியர் ஹரிஹரன் மீது புகார் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தன் மீது குற்ற மற்றும் துறைரீதியான நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு, 50 லட்சம் ரூபாயை ஹரிஹரன் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுசம்பந்தமாக அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி செயலாளர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, ஊழல் தடுப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி வழங்க மறுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக மத்திய கல்வி துறை பதிலளித்ததாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில், மனுதாரரின் புகாருக்கு ஆதாரங்கள் உள்ளது எனத் தெரிவித்த நீதிபதி, பொய் ஊழல் புகார்களில் இருந்து அதிகாரிகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்க முடியாது எனக் கூறி, புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள சிபிஐ-க்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications