விரக்தி.. பெரும் ஏமாற்றம்.. மொத்தமாக டாட்டா காட்ட போகும் நாராயணசாமி.. பரபரப்பில் புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாலும் முக்கியமான காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியதாலும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெற்றது. இங்கு காங்கிரஸ் சார்பாக நாராயணசாமி முதல்வராக இருந்தார்.
2016தேர்தலில் முதலில் இவர் போட்டியிடவில்லை என்றாலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்ற பின் முதல்வராக பொறுப்பேற்று, பின் இடைத்தேர்தலை எதிர்கொண்டார் நாராயணசாமி. இந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது.

நாராயணசாமி
புதுச்சேரி காங்கிரசில் வலிமையாக இருந்த மல்லாடி கிருஷ்ணராவ், நமச்சிவாயம் போன்றவர்கள் காங்கிரசில் இருந்து விலகி பாஜக, என். ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் சேர்ந்தனர். இதனால் மொத்தமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இன்னொரு பக்கம் என். ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

மோசம்
இங்கு மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பாக வெளியிடப்பட்ட புதுச்சேரி வேட்பாளர் பட்டியலில் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை. முதல்வராக இருந்த நாராயணசாமி இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் இவர் புதுச்சேரி அரசியலில் இருந்தே வெளியேறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்ச்சை
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கட்சி மாறியதாலும், நிர்வாகிகள் பலர் தனக்கு எதிராக இருப்பதாலும் நாராயணசாமி விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மூத்த நிர்வாகிகள் ஏமாற்றிவிட்டனர், மீண்டும் ஆட்சி அமைப்பதும் கஷ்டம் என்று நாராயணசாமி வருத்தத்தில் உள்ளார். இதனால் புதுச்சேரி மாநில அரசியலுக்கு டாட்டா காட்டும் திட்டத்தில் அவர் உள்ளதாக கூறுகிறார்கள்.

தேசிய அரசியல்
கிட்டத்தட்ட காங்கிரசில் தேசிய அளவில் 20 வருடங்கள் நாராயணசாமி கோலோச்சினார். அதேபோல் மீண்டும் தேசிய அரசியலுக்கு திரும்ப நாராயணசாமி திட்டமிட்டுள்ளார். புதுச்சேரியில் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை அவர் விரும்பவில்லை. இதனால் தேசிய காங்கிரசுக்கு கம்பேக் கொடுக்க போகிறார் என்று நாராயணசாமிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாய்ப்பு
அதே சமயம் ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால் நாராயணசாமி மீண்டும் முதல்வராக வாய்ப்புள்ளது. மீண்டும் இடைத்தேர்தலை எதிர்கொண்டு அவர் முதல்வராக வாய்ப்புள்ளது . ஆனால் காங்கிரஸ் வெற்றிவாய்ப்பு குறைவாக இருப்பதாலே அவர் டெல்லிக்கு திரும்பும் திட்டத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications