புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.. 3வது மொழியை கற்பதில் தவறில்லை.. ஆளுநர் தமிழிசை பேச்சு!
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்றும், கூடுதலாக மூன்றாவது மொழியை மாணவர்கள் கற்பதில் எந்த தவறும் இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி அரவிந்தர் சங்கத்தில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் கலந்து கொண்டார். அப்போது புதுச்சேரியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், தாய்மொழியோடு, ஆங்கிலம் மற்றும் இன்னொரு மொழியையும் கற்கலாம். மூன்றாவது மொழியை கற்பதன் மூலம் வாய்ப்பை அதிகரிக்க முடியும். கூடுதலாக ஒரு மொழியை கற்பதால் தாய்மொழியை அவமதிப்பது ஆகாது என்று தெரிவித்தார்.

திணிப்புக்கு வழி இல்லை
இதனைத்தொடர்ந்து துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியையும் திணிக்க வழி இல்லை. தாய்மொழி கல்வியைதான் புதிய கல்விக்கொள்கையில் வலியுறுத்தியுள்ளார்கள். தாய் மொழியில் பேசினாலும், தாய்மொழியில் எவ்வளவு பேர் கற்கிறார்கள்.

இடைநிற்றல் இருக்காது
தாய்மொழி கல்வி பின்வரிசையில்தான் உள்ளது. ஆங்கில வழிக்கல்வியை தான் பெருமையாக பேசுகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாக படித்து புரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை திடீரென்று யாரும் கொண்டு வரவில்லை. அதில் பல நன்மைகள் இருக்கிறது. இந்தக் கல்விக் கொள்கை மூலம் மாணவர்களின் இடைநிற்றல் இருக்காது. குழந்தைகளை வகுப்பறை தாண்டி உலக அரங்கில் உயர்ந்தவர்களாக மாற்றவேதான் இம்முறை அமலாகிறது என்று தெரிவித்தார்.

தற்காப்புக் கலை
தொடர்ந்து பேசிய அவர், தற்காப்பு கலையை அனைத்து பள்ளிகளிலும் சொல்லிக் கொடுக்க வேண்டும். புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல் குழந்தைகளுக்கும் உளவியல் ஆலோசனை தர ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் என்று தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை அமல்
அதேபோல் புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என்றும் புதிதாக கல்வி வாரியம் தொடங்குவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கவேண்டும். புதிய கல்விக்கொள்கை புதுச்சேரியில் நிச்சயமாக அமல்படுத்தப்படும். முதலிலேயே எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திப்போம்.
வருங்காலம் சவாலான காலம். உலக அரங்குகளில் மாணவர்கள் போட்டியிட வேண்டும். அதற்கான சவால்களை சந்திக்க குழந்தைகளை தயார் செய்யவே புதிய கல்விக்கொள்கை கொண்டுவரப்படுவதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications