முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி?
புதுச்சேரி: புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முடிவடைந்திருக்கிறது. 3 சட்டமன்ற தேர்தல்களும் ஏப். 9ம் தேதி நடைபெற உள்ளன.
கேரளாவின் 140 தொகுதிகள் உட்பட 3 மாநில வேட்பாளர்களும் தங்கள் மனுக்களைச் சமர்ப்பிப்பதில் முனைப்புடன் உள்ளனர். இந்த மனுக்கள் மார்ச் 24 அன்று பரிசீலிக்கப்படும். மார்ச் 26 வரை மனுக்களைத் திரும்பப் பெறலாம்.

புதுச்சேரியில் என்ன நிலைமை?
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் நிலவிய இழுபறி முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் 16 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும், சிபிஐ மற்றும் விசிக தலா 1 இடத்திலும் போட்டியிடுகின்றன. இதனால் இன்று கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் அவசரமாக மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல ஏற்கனவே மனு தாக்கல் செய்தவர் திரும்ப பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கேரளாவில் என்ன நிலைமை?
ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சத்தீசன், இன்று பரவூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். பெரும்பாலான முக்கிய வேட்பாளர்கள் ஏற்கனவே தங்கள் மனுக்களைச் சமர்ப்பித்துவிட்ட நிலையில், கடைசி நாளான இன்று தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களில் பெரும் கூட்டம் திரண்டுள்ளது.
சூடுபிடிக்கும் பிரச்சாரம்
வேட்புமனுக்கள் தாக்கல் முடிந்த நிலையில், கட்சிகள் அடுத்தக் கட்டப் பிரச்சாரத்தில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளன. எல்டிஎஃப் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் நாளையிலிருந்து ஏப்ரல் 3 வரை 48 மையங்களில் மாநிலச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்கிறார். பிரகாஷ் காரத், பிருந்தா காரத், எம்.வி. கோவிந்தன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் எல்டிஎஃப் சார்பில் பரப்புரை செய்கின்றனர்.
களமிறங்கும் ராகுல் காந்தி
யுடிஎஃப் பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 25 அன்று கோழிக்கோட்டில் பேரணியுடன் தொடங்கவுள்ளார். மேலும் பல தேசிய தலைவர்களும் யுடிஎஃப்-க்காக விரைவில் கேரளா வரவுள்ளனர்.
தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ) சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறு அன்று திருச்சூரில் சாலைப் பேரணி நடத்துகிறார். பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தேசிய தலைவர்கள் விரைவில் கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்வார்கள்.
தேர்தல் எப்போது?
மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். மே 4-ல் வாக்குகள் எண்ணப்படும். கேரளாவில் எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் இடையேயான கடும் போட்டிக்கு, என்டிஏவின் இருப்பு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில், மாற்றத்திற்கான கடுமையானப் போட்டி நிலவுகிறது.
அசாமில் நிலைமை என்ன?
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சி, 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான 21 வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவித்தது. இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகக் கருதப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க JMM தயாராகி வருகிறது. அதேபோல கௌரவ் கோகோய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications