ஆமா.. அஜித், விஜய்க்கு கை தட்டுறீங்களே.. அதுவா முக்கியம்.. ஆளுநர் தமிழிசை "நறுக்" பேச்சு
புதுச்சேரி: நடிகர் அஜித்துக்கு கைத்தட்டுவதை விட அகிம்சை வாதியான காந்திக்கும், நடிகர் விஜய்க்கு கைத்தட்டுவதை விட விடுதலை பெற்று தந்த வஉசிக்கும் அதிகம் கைத்தட்ட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வருபவர் தமிழிசை செளந்தரராஜன்.
இவர் புதுச்சேரியை அடுத்த மதகடிபட்டியில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் காந்தி மையம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கினார்.

விஜய், அஜித்தை விட...
இந்த விழாவில் தமிழிசை செளந்தரராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் அஜித்துக்கு கைத்தட்டுவதை விட அகிம்சை வாதியான காந்திக்கு அதிக கைத்தட்டு கொடுக்க வேண்டும். நடிகர் விஜய்க்கு கைத்தட்டுவதை விடுதலை பெற்று தந்த வஉசிக்கு அதிகம் கைத்தட்ட வேண்டும். அஜித், விஜய்க்கு கைத்தட்ட வேண்டாம் என கூறவில்லை. நடிகர்களை காட்டிலும் காந்தி, வஉசிக்கு அதிகம் கைத்தட்டுங்கள் என கூறுகிறேன்.

திறமை, தன்னம்பிக்கை அவசியம்
பெண்கள் பலதுறைகளில் சாதித்து வருகின்றனர். தொடர்ந்து சாதிக்க துடிக்கின்றனர். பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் திறமையும், தன்னம்பிக்கையையும் வளர்த்து கொள்ள வேண்டும். இதை எந்த காரணத்தை கொண்டு கைவிட்டு விடக்கூடாது. அதேநேரத்தில் காலத்தோடு, இல்வாழ்கையிலும் பங்கேற்க வேண்டும்.

அன்பு மிகுந்த வாழ்க்கையே மகிழ்ச்சி
என்னை பொறுத்தவரை நான் ஆளுநராக இருப்பதை விட குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பதையும், கணவருக்கு நல்ல மனைவியாக இருப்பதையும் தான் பெருமையாக கருதுகிறேன் ஏனென்றால் பெண்களுக்கு அதிகாரம் மிகுந்த வாழ்க்கையை விட அன்பு மிகுந்த வாழ்க்கையே மகிழ்ச்சியை தரும்'' என்றார்.

காந்தியின் குறுந்தகடு வெளியீடு
இந்த விழாவில் மாணவர்களுக்கான மகாத்மா காந்தி கார்ட்டூன் திரைப்படம் குறுத்தகட்டை தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டார். முன்னதாக பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு தமிழிசை செளந்தரராஜன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ் கண்ணா உள்பட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications