ஆஹா! கேஸ் மானியம் ரூ.300.. பெண் குழந்தைகளுக்கு ரூ.50000.. புதுச்சேரி முதலமைச்சரின் அசத்தல் அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியமாக ரூ.300 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
புதுச்சேரிக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த போது, முதல்வர் ரங்கசாமி இதனை அறிவித்தார். மேலும், பல்வேறு சலுகைளையும், திட்டங்களையும் அறிவித்தார்.
குறிப்பாக, பெண் பிள்ளைகளுக்கு ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி போன்ற அறிவிப்புகள் புதுச்சேரி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
புதுச்சேரிக்கான 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ரங்கசாமி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ.11,600 கோடி வரியில்லா பட்ஜெட்டாக இது இருந்தது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மக்களை கவரும் பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, ஏழை, நடுத்தர மக்கள் பயனடையும் வகையிலான அம்சங்கள் இதில் இருந்தன.

கேஸ் சிலிண்டர் மானியம்
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, சமீபகாமலாக தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியத்தை அதிரடியாக அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி. அனைத்து வகை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக புதுச்சேரி அரசு ரூ.126 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் புதுச்சேரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்
இந்த பட்ஜெட்டில், "பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெண் குழந்தைகளுக்கு 18 ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். இதேபோல, தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் ரூ.100 கோடிக்கு மேல் முதலீடு செய்து தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரு சதவீத மானியம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் புதுச்சேரியில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வந்து இளைஞர்களின் வேலைவாய்ப்பு பெருகும் என அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் மாலை சிற்றுண்டி
இவை தவிர, புதுச்சேரி பட்ஜெட்டில் உள்ள அம்சங்களாவன: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும். சென்டாக் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களு்குக நிதியுதவி வழங்கப்படும். பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டத்தின் கீழ் மரு்ததுவம், பொறியியல், நர்சிங் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் உயிரியல் பூங்கா
கடலுக்கு அடியில் உயிரியல் பூங்கா அமைக்கப்படும். பொது இடங்களில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் இயந்திரங்கள் நிறுவப்படும். 50 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும். மீனவ சமூகத்தைச் சேர்ந்த முதியவர்களின் உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தப்படும். அனைத்து தெரு மின் விளக்குகளையும் ரூ.4.50 கோடி செலவில் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும். புதுச்சேரி, வில்லியனூர், தவளக்குப்பம், லிங்காரெட்டிபாளையும் ஆகிய இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications