கோடிக்கணக்கில் மோசடி.. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம்.. பக்தர்களே உஷார்
புதுச்சேரி: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி பல ஆண்டுகளாக மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
புதுச்சேரி யுனியன் பிரதேசம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. சனீஸ்வர பகவான் கோவில் என்று இது அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் உள்ளிட்டவை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த கோவிலுக்கு வாரத்தின் பிற நாட்களை காட்டிலும் சனிக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு என்று தனியாக இணையதளம் உள்ளது. அதில் சிறப்பு பூஜை, தரிசனம் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது.
இந்நிலையில் தான் கோவில் பெயரில் போலியாக இணையதளம் தொடங்கி பணமோசடி செய்யப்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திருநள்ளாறு கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் போல் போலியாக இணையதளம் தொடங்கி அதில் ஆங்கிலத்தில் தரிசனம், பூஜை விபரங்கள், அதுதொடர்பான போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை நம்பிய மக்கள் சிறப்பு பூஜை, சாமி தரிசனம், அர்ச்சனை, அபிஷேகத்திற்கு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஒரு ரூபாயிலும், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு டாலர் மதிப்பிலும் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி பல மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதோடு, அந்த போலி இணையதளம் உருவாக்கியவர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த இணையதளத்தை நம்பி பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த இணையதளத்தை உருவாக்கியது யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த அதிகாரிகள், கோவிலை சார்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications