மேகதாது அணை- கர்நாடகாவின் விடா பிடிவாதம்- இடியாப்ப சிக்கலில் புதுச்சேரி என்.ஆர். காங். கூட்டணி
புதுச்சேரி: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழகத்தில் திமுக அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்ளும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு இப்போது என்ன செய்யப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகி உள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. புதுச்சேரியில் அண்மையில்தான் அமைச்சர்களுக்கு துறைகளும் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு அணை கட்டியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அனைத்து கட்சி கூட்டம்- கோரிக்கை
இதனையடுத்து தமிழ்நாடு அரசைப் போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார். அந்த சந்திப்பில் காவிரி பிரச்சனை குறித்து விரிவாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அமைச்சரிடம் தரப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கான காவிரி பங்கு
காவிரிப் பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நம்பியார், புதுச்சேரிக்கு 9 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என வாதாடினார். ஆனால் நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி தண்ணீரைத்தான் உச்சநீதிமன்றமும் ஒதுக்கியது . நடுவர் மன்றம் புதுச்சேரியில் குறுவை மற்றும் சம்பா இணைந்த முதல்போக சாகுபடி 27,145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் இரண்டாம் போக சாகுபடி 15,388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதிசெய்தது.

கர்நாடகா மேகதாது அணை
புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி நீர் தமிழ்நாட்டின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் புதுச்சேரி பெற வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. தற்போது மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும்.
Recommended Video

புதுவை அரசுக்கு நெருக்கடி
ஆகையால் தமிழக அரசைப் போல புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய இக்கட்டுக்கு தள்ளப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் காரைக்கால் விவசாயிகள் போராடும் நிலை உருவாகும். இதனால் மேகதாது அணை விவகாரமானது புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications