ஆளுநர்கள் மக்களை சந்தித்தாலே சிலருக்கு குளிர் ஜுரம் வருகிறது.. கிண்டல் செய்த ஆளுநர் தமிழிசை!
புதுச்சேரி : அனைத்து ஆளுநர்களும் மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியல் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு, தெலுங்கானா உட்பட பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகளால், அவரை திரும்பப் பெற வேண்டும் என ஆளும் திமுக அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவுக்கும், அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், அனைத்து ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறோம். ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகள் கூட விமர்சனம் செய்யப்படுவதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு மாநில்ங்களின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் கல்வி சுற்றுலா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அந்த மாணவர்கள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, ராஜ் நிவாசில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது கல்விமுறை, போட்டி நிறைந்த உலகில் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டு வெற்றியாளர்களாக உருவாகுவதற்கான முயற்சி ஆகியவை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மாணவர்களுக்கு ஆலோசானை வழங்கினார்.

ஆளுநருக்கு சவால்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் இருந்து தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ஆளுநரின் தாமதம் தான் 6 பேர் விடுதலைக்கு காரணம் என்று கூறமுடியாது. ஆளுநர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம். சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்போது பல மாநிலங்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்து விடக்கூடாது என்று ஆளுநர் அதை சவாலாக நினைத்து இருக்கலாம்.

காரணம் இருக்கும்
ஆளுநருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்திருக்கக் கூடும். எல்லா ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறோம். இதில் விதிமீறல்கள் இல்லை. ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட அரசியல்வாதிகளால் விமர்சனம் செய்யப்படுகிறது. ஆளுநர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இப்போது ஆளுநர்கள் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.

குளிர் ஜுரம்
அனைத்து ஆளுநர்களும் மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியல் அமைப்பால் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கை விமர்சிக்கும் வகையில் தமிழிசை கிண்டலாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications